நான் முதல்வன் திட்டத்தில்பயிற்சி; விண்ணப்பிக்க அழைப்பு
நான் முதல்வன் திட்டத்தில்பயிற்சி; விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 07, 2025 01:28 AM
ஈரோடு:தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பல்வேறு அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவின் கீழ், அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி), பொதுத்துறை வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு மாநிலம் முழுவதும் வரும், 31ல் நடக்கிறது.
இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும், 1,000 தேர்வர்களுக்கு ஆறு மாதத்துக்கு பயிற்சி, தங்கும் இட வசதி, உணவு ஆகியவை அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நான் முதல்வன் திட்ட நுழைவுத்தேர்வினை, இருவேறு தேர்வுகளாக ஓஎம்ஆர் முறையில் இரண்டு மையங்களில் நடத்த அரசு தேர்வுகள் துறையினர் திட்டமிட்டுள்ளனர். யு.ஜி.சி அங்கீகரித்த பல்கலைக்கழகத்தின் கீழ், இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 13க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் இல்லை. போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, அரசு தேர்வுகள் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
