ADDED : மே 14, 2026 06:20 AM
ஈரோடு:பவானி நகராட்சி, மைலம்பாடி பஞ்சாயத்து பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
பவானி, தேவபுரம் பகுதியில் துாய்மை இந்தியா திட்டம்-2.0ன் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள், அப்பகுதியில் உள்ள, நுண் உரமாக்கும் மையத்தில் தினமும் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
பவானி யூனியன் ஆண்டிகுளம் பஞ்., விநாயகர் நகரில், 13.28 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் சிமென்ட் கான்கிரீட் தளம், சாலையின் தரம், நீள, அகலம், தடிமனை உறுதி செய்தார்.
பின் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், சுகாதார நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார். 100 நாள் வேலை திட்டத்தில், வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கல்பாவி சாலை வரை மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பதை உறுதி செய்தார்.நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ்கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் பழனிவேல், நகராட்சி பொறியாளர் திலீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
