ADDED : ஆக 26, 2026 06:58 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து, வாழ்வாதார வசதியான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைக்கவும், தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ கைம்பெண்கள், ஆதரவற்றோர் நலவாரியம் செயல்படுகிறது.
சமூக நலத்துறை இணைய தள பக்கம், https://tnsocialwelfare.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. அதில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கைம்பெண்கள், ஆதரவற்றோர் நலவாரியத்துக்கென தனியாக உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலை பயன்பாட்டின் மூலம் தமிழக கிராமங்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் இருந்து எளிய முறையில் பெற, இணைய தள முகவரியில் பதிவு செய்து உறுப்பினராகலாம். உறுப்பினராக பதிவு செய்தோருக்கு சமூக நலத்துறை திட்டங்கள், ஓய்வூதியங்கள், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுய தொழில் செய்ய மானியம் போன்ற உதவிகள் பெறலாம்.
