ஆசனுாரில் சிக்கியதா சிறுத்தை? வனத்துறை மீது சந்தேகம்
ஆசனுாரில் சிக்கியதா சிறுத்தை? வனத்துறை மீது சந்தேகம்
ADDED : அக் 23, 2026 06:39 AM

சத்தியமங்கலம்,:ஆசனுாரில்
சிறுத்தை பிடிபட்டதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான பிற விபரங்களை
தெரிவிக்காததால், ஆசனுார் வனத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தாளவாடி மலை ஆசனுார் மலை கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கும்
மேலாக சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதியில் இருந்தனர். பழங்குடி
வாலிபர் மற்றும் பல கால்நடைகளை கொன்று ருசித்த சிறுத்தையால், மக்கள்
பகலில் நடமாடவே தயங்கி வந்தனர். இந்நிலையில் சிறுத்தை நேற்று காலை
கூண்டில் சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேசமயம்
சிக்கிய சிறுத்தை குறித்து பிற விபரங்களை தெரிவிக்கவில்லை.
போரட்டத்தை முடக்கவா?
இதுகுறித்து
மக்கள் கூறியதாவது: ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்காவிட்டால்,
அக்.,23ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக
எச்சரித்திருந்தோம். இந்த போராட்டத்தை தவிர்க்க வனத்துறையினர்
ஏதாவது முயற்சி செய்கிறார்களா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் பிடிபட்ட சிறுத்தையை பார்க்க, யாருக்கும் அனுமதிக்கவில்லை.
மேலும் இரண்டு சிறுத்தை குட்டி, ஒரு சிறுத்தை சிக்கியதாகவும்
தெரிகிறது. ஒரு சிறுத்தை மட்டுமே நடமாடிய நிலையில், இரு குட்டிகள்
எப்படி வந்தது என தெரியவில்லை. இந்தப்பகுதியில் நடமாடிய சிறுத்தை
தானா அல்லது வேறு பகுதியில் சிக்கிய சிறுத்தையை கொண்டு வந்துள்ளனரா
என்பதும் தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.
வனத்துறை அறிக்கை
இதனிடையே
வனத்துறையினர் நேற்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
'ஆசனுார் வனச்சரகத்தில் இன்று (நேற்று) பிடிபட்ட சிறுத்தை அதன் விடுவிப்பு
போன்ற முழு தகவல் நாளை (இன்று) தெரிவிக்கப்படும்' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
