ADDED : ஆக 05, 2025 01:28 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சிவராஜ் கார்த்திகேயன், 53; காங்கேயத்தில் தனியார் வே பிரிட்ஜ் அருகே சின்னசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை, 2007ம் ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்த பத்திரம் போட்டுள்ளார். அந்த இடத்தில் ஓட்டல் கட்டி நடத்தி வந்துள்ளார். சின்னசாமி இறந்ததால், அவரது உறவினர் மயில்சாமிக்கு சொத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டல் இடத்தை காலி செய்ய, மயில்சாமி தரப்பினர் சிவராஜ் கார்த்திகேயனுக்கு நெருக்கடி தந்துள்ளனர். இதுகுறித்து சிவராஜ் கார்த்திகேயன், 2022 ஜூலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையறிந்த மயில்சாமி, 47, மனைவி சுமதி, 42, ஆகியோர் தலைமையில், செப்., 27ம் தேதி இரவு கட்டடத்தை ஜே.சி.பி., கொண்டு இடித்து, சிவராஜ் கார்த்திகேயன் மற்றும் ஹோட்டல் வேலையாட்களை கட்டையால் தாக்கி, கேமராக்களை எடுத்து சென்றுள்ளார். இந்த வழக்கு சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி நேற்று தீர்ப்பளித்தார். இதில் மயில்சாமி, அவரது மனைவி சுமதிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.