ADDED : மே 18, 2024 01:18 AM
டூவீலர்கள் மோதல்
படுகாயமடைந்த பெண்
அரவக்குறிச்சி: பள்ளபாளையம், அரசு காலனியை சேர்ந்தவர் ரகுபதி மனைவி ராதிகா, 40. இவர் நேற்று கரூரில் இருந்து, சின்னதாராபுரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். குளத்துார்பட்டி அருகே சென்ற போது, எதிரே கரூர் மாவட்டம், வாங்கல் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் சுதாகரன், 25, என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ராதிகா ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், ராதிகாவிற்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சுதாகரன் மீது, க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊர்க்காவல் படை பெண்ணிடம்மொபட், மொபைல் போன் பறிப்பு
கரூர்: கரூர் அருகே, ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணிடம் இருந்து மொபட், மொபைல் போனை பறித்து சென்ற, வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சின்ன கவுண்டனுார் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி, 46; கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 15 இரவு சமத்துவபுரம் பிரிவு சாலையில், டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 25 வயதுடைய இரண்டு வாலிபர்கள், குணசுந்தரியை மிரட்டி மொபட் மற்றும் மொபைல் போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, குணசுந்தரி போலீசில் புகார் அளித்தார்.
வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
உயர்கல்வி வழிகாட்டல் குழுஉறுப்பினர்களுக்கான பயிற்சி
அரவக்குறிச்சி: நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும், உயர் கல்வி வழிகாட்டு குழு உறுப்பினருக்கான பயிற்சி, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும், உயர் கல்வி வழிகாட்டு குழு உறுப்பினருக்கான பயிற்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி, துணைத் தலைவி, கல்வியாளர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் என, 44 பேர் கலந்து கொண்டனர்.
கருத்தாளர்களாக டிஐஇடி விரிவுரையாளர் ரொசாரியோ, ஆசிரியர் பயிற்றுனர்கள் ரதிப்பிரியா மற்றும் தீபா செயல்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிப்பு படிக்கலாம் என்பது குறித்தும், வேலை வாய்ப்பு குறித்தும் விளக்கப்பட்டது.
அதிகளவு குடி போதையால்மின்வாரிய ஊழியர் சாவு
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, மேல்சாத்தம்பூர், தொட்டிபட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 58. இவர், மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து, கடந்த, 2021ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதன் காரணமாக குடிப்பழக்கத்தால், ராமசாமி அடிக்கடி ரோட்டோரத்தில் படுத்து கிடப்பார். இந்நிலையில், ராமசாமி வசந்தபுரம் ஒயின் ஷாப்பில், நேற்று முன் தினம் மாலை, அதிகளவில் மது குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமசாமியின் மகன் சுரேஷ்குமார், 24, நல்லுார் போலீசில் அளித்த புகார்படி, அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
