ADDED : ஏப் 23, 2026 04:26 AM

அந்தியூர்:அந்தியூர் தொகுதியில் தொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4 மணி நேரம் தாமதமாக கொண்டு செல்லப்பட்டன.
அந்தியூர்
தொகுதியில் மொத்தம், 271 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில்,
தவிட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளி, செம்புளிச்சாம்பாளையம்,
பர்கூர் உள்ளிட்ட, 14 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இத்தொகுதியில், பர்கூர் ஊராட்சியிலுள்ள கத்திரி
மலையிலிருந்து
முதல் ஓட்டுச்சாவடி துவங்குகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கும்
நிலையில், அந்தியூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜாகீர் உசேன்
மேற்பார்வையில், 271 'பூத்'களுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று காலை துவங்கியது.
அந்தியூர்
தாலுகா அலுவலகத்தில் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறை, கட்சி
பிரமுகர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு, பேரூராட்சி
பணியாளர்களால் ஒவ்வொன்றாக வாகனங்களில் ஏற்றப்பட்டன. அதன்பின்
மதியம், 12:30 மணிக்கு மேல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள்
ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன. இயந்திரங்கள் பழுது
ஏற்பட்டால், மாற்றாக, 50 இயந்திரங்கள் தயார் நிலையில் மொபைல் வேனில்
வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலின்போதும், தொலைவிலுள்ள
பர்கூர் ஊராட்சி 'பூத்'களுக்கு, காலை 8:00 மணிக்கு இயந்திரங்கள்
அனுப்பப்படும். ஆனால் நேற்று, 4 மணி நேரம் தாமதமாக, பர்கூர்
ஊராட்சியின் கத்திரிமலை, தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள
குட்டையூர், வேலம்பட்டி மற்றும் அடர்ந்த வனப்பகுதியிலுள்ள
கிராமங்களுக்கு அனுப்பப்பட்டன.
அதுவரை, தேர்தல் பணியாளர்கள்,
போலீசார் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருந்து களைத்து போயினர்.
மேலும், மூன்று மணி நேரத்துக்கு பின், மலை கிராம 'பூத்'களுக்கு கொண்டு
செல்லப்பட்ட இயந்திரங்களை பொருத்தி சரி பார்ப்பதற்கும் தாமதம்
ஏற்பட்டது. இதில் கத்திரி
மலை ஓட்டுச்சாவடிக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல, 5 மணி நேரத்திற்கு மேலானது.
