பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கூட்டம்
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கூட்டம்
ADDED : பிப் 27, 2026 10:23 AM

ஈரோடு: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கூட்டம், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.
பிளஸ் 2 தேர்வு மார்ச், 2ம் தேதி துவங்கி 26ல் நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 11ல் துவங்கி ஏப்.,6ல் நிறைவு பெறுகிறது. தேர்வு தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள், தேர்வு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் நடக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர்களுக்கான கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் ராமசாமி பங்கேற்றார். தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய செயல்பாடு குறித்து அறிவுரை வழங்கினார்.
தேர்வு மையத்தில் எவ்வித குறைபாடும் இருக்க கூடாது. வழித்தட அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வினாத்தாள்களை சேர்க்க வேண்டும். விடைத்தாள்களையும் குறித்த நேரத்துக்கு திரும்ப பெற்று மையங்களுக்கு எடுத்து செல்ல அறிவுறுத்தினார். இதில், 800 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மான்விழி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
