ADDED : மே 28, 2024 07:14 AM
தியாகி சுப்பிரமணியம் அரங்கம் திறப்பு விழா
கோபி : தியாகி சுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட அரங்கத்தின் திறப்பு விழா, கோபியில் நேற்று நடந்தது. இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்து பேசினார். கட்டட குழு கன்வீனர் பெரியசாமி வரவேற்றார். பொது செயலாளர் ராஜா கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார், கோபி ஒன்றிய செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் கோபியில் கைது
கோபி : கோபி அருகே மேட்டுவலவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 31, டிரைவர்; கோபி அருகே, 17 வயது சிறுமியின் தாயிடம் முதலில் நட்பாகி பழகினார். நாளடைவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில் சிறுமி கர்ப்பமானார். புகாரின்படி கோபி அனைத்து மகளிர் போலீசார், விஸ்வநாதனை நேற்று கைது செய்தனர்.
கேரள அரசை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
தாராபுரம் : சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட முயலும் கேரள அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மின்னல் தலைமை வகித்தார். அமராவதி அணைக்கு வரும் நீரை தடுத்து நிறுத்தும் வகையில், சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். நிர்வாகிகள் சிவகுமார், சதீஷ்குமார், புகழேந்தி உள்பட, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஸ்பின்னிங் மில்லில் தீ ;ரூ.5 லட்சத்துக்கு சேதம்
காங்கேயம் : காங்கேயம், ஊதியூரை அடுத்த கொடுவாயில், பொள்ளாச்சி சாலையில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இங்கு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் பணியில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மில்லின் ஒரு பகுதியில் பஞ்சு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு பஞ்சில் தீப்பிடித்தது. தகவலறிந்து சென்ற பல்லடம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், இருப்பு வைக்கப்பட்டிருந்த பஞ்சு, இயந்திரம் எரிந்து விட்டது. இதன் மதிப்பு, ௫ லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காங்கேயம் அருகே ஆண் சடலம் மீட்பு
காங்கேயம் : காங்கேயம் அருகே சின்னமலையில், அரசு புறம்போக்கு பகுதியில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கிடந்தது. தகவலின்படி சென்ற காங்கேயம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்து கிடந்த ஆசாமி, வெள்ளை கலரில் செங்கல் கலரில் கோடு போட்ட சட்டை, புளூவில் வெள்ளை கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். சடலத்தின் அருகில் சல்பாஸ் மாத்திரைகள், பீடிக்கட்டு கிடந்தது. சென்ட்ரா டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொப்பரை வரத்து சரிவு
காங்கேயம் : காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 217 கிலோ கொப்பரை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 87.65 ரூபாய்; குறைந்தபட்சம், 75.10 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், கொப்பரை வரத்து சரிந்து விட்டதாக, விற்பனைக்கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.
ரூ.1.34 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ஈரோடு : எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 13,682 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 25.31 ரூபாய் முதல், 28.39 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 5,060 கிலோ தேங்காய், 1.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வீட்டில் முயல் கறி பதுக்கியவர் கைது
அந்தியூர் : அந்தியூர் அருகே கோவிலுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 31; இவரது வீட்டில் முயல்கறி, சந்தனக்கட்டை இருப்பதாக, அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்தியூர் ரேஞ்சர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், பிரகாஷ் வீட்டில் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். முயல் கறி, இரண்டு சந்தனமரக்கட்டை, மூன்று ஏர்கன், வேட்டைக்கு பயன்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் கருவி, ஐந்து டார்ச் லைட், கறிவெட்டும் கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
சரிந்தது பவானிசாகர் அணை நீர்வரத்து
பவானிசாகர் : பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் பெய்த கன மழையால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 44 அடியில் இருந்து 53 அடியாக உயர்ந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், 2,032 கன அடியாக இருந்த நீர்வரத்து, 764 கன அடியாக நேற்று சரிந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 53.78 அடி, நீர் இருப்பு 5.4 டி.எம்.சி.,யாக இருந்தது.
ஆசிரியர் கவுன்சிலிங் விண்ணப்பம் ஒருங்கிணைப்பு
ஈரோடு : பணிபுரியும் மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விருப்பம் தெரிவித்து துவக்க பள்ளி, இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், நடுநிலை பள்ளி, உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாற்ற கவுன்சிலிங் பள்ளி கல்வி துறை சார்பில் நடக்கிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில் இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். கடந்த, 25ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பங்களை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தகுதி அடைப்படையிலான விண்ணப்பம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பபடும். அதன் அடிப்படையில் இடமாற்ற கவுன்சிலிங்கிற்கு ஆசிரியர் அனுமதிக்கப்படுவர்.
116 மதுபாட்டில் பறிமுதல்
ஈரோடு : ஈரோடு,கோபி மதுவிலக்கு போலீசார் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பது குறித்து கண்காணித்தனர். இதில், 6 கர்நாடகா மாநில மதுபாட்டில் உள்ளிட்ட, 116 மதுபாட்டில்கள் பிடிபட்டன. அவற்றை பறிமுதல் செய்தனர். 16 வழக்குகள் பதிவு செய்து,16 பேரை கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அனுசரிப்பு
ஈரோடு : முன்னாள் பிரதமர் நேருவின், 60வது நினைவு நாள், ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நேரு உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கோபி, முன்னாள் கவுன்சிலர் புனிதன், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஜவஹர் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
பதவி உயர்வு வேண்டும்: காப்பாளர்-ஆசிரியர் தீர்மானம்
ஈரோடு : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் - ஆசிரியர் சங்கம் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.மாநில தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பட்டதாரி காப்பாளினி செல்வி வரவேற்றார். மாநில பொது செயலாளர் ரகுநாத், ரவிசந்திரன், ராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காப்பாளர் பதவிக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஒருங்கிணைந்த சமையல் கூடம் ஏற்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.
போக்குவரத்து ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்
நம்பியூர் : அரசு போக்குவரத்து கழகம், நம்பியூர் கிளை சி.ஐ.டி.யு., சங்கத்தினர், நம்பியூர் கிளை மேலாளரை கண்டித்து, நம்பியூர் பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். பணிமனை கிளை மேலாளர் அராஜக போக்கை கண்டித்தும், முறையாக விடுப்பு கேட்கும் தொழிலாளர்களுக்கு ஆப்செண்ட் போடுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர் கலந்து கொண்டனர்.
25 நாட்களில் 239 கடைகளில் 158 கிலோ மாம்பழம் பறிமுதல்
ஈரோடு : ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவுப்படி, மாவட்ட அளவில் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகள், சிறு விற்பனை கடைகளில், ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.இதுபற்றி, உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது: மாவட்ட அளவில் கடந்த, 25 நாட்களில், 239 கடைகள், குடோன்களில் நடத்திய சோதனையில், 16 கடைகளில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட, 158 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தோம். இது தொடர்பாக, 16 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 16,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, 210 தர்பூசணி விற்பனை நிலையம், கடை, மண்டிகளில் நடத்திய சோதனையில், எட்டு கடைகளில் ரசாயன கலப்பு, அழுகிய பழங்கள் என, 53 கிலோ தர்பூசணி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை உணவு பாதுகாப்பு துறைக்கு, 94440-42322 என்ற வாட்ஸ் ஆப்பில் எண்ணில் மக்கள் அனுப்பலாம். இவ்வாறு கூறினர்.
கலெக்டர் அலுவலகத்தில் 30 மனுக்கள் வருகை
ஈரோடு : லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களிடம் இருந்து மனுக்களை பெறும் வகையில், அலுவலக நுழைவு வாயிலில் புகார் பெட்டி வைத்து, தினமும் மனுக்களை சேகரிக்கின்றனர். குறைதீர் கூட்டம் நடக்கும் நாளான நேற்று அலுவலக உதவியாளர் ஒருவரை நிறுத்தி, மனு வழங்க வருவோரை, பெட்டியில் போட்டு செல்லும்படி கூறினர். பட்டா மாற்றம், போலீஸ் நடவடிக்கை, சொத்து தொடர்பான பிரச்னை என, 30 மனுக்கள் வரப்பெற்றதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.