ADDED : செப் 11, 2026 06:44 AM

கரூர்:கரூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள, சமூக நீதி விடுதிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலஷ்மி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில், 15 விடுதிகளில் 692 மாணவ, மணவியர் தங்கி பயின்று வருகின்றனர். அதில், வெங்ககல்பட்டி, அருகம்பாளையம், மல்லமநாயக்கன்பட்டி, தான்தோன்றிமலை ஆகிய நான்கு விடுதிகளில் உள்ள மாணவ, மாணவியரின் தேவை மற்றும் குறைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இங்குள்ள, 320 மாணவ, மாணவியருக்கான இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 348 பேர் தங்கி பயின்று வருகின்றனர். அரசு விடுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி, பாதுகாப்பான மற்றும் தரமான தங்குமிட வசதிகளை உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, கலெக்டர் முத்துக்குமரன், கிருஷ்ணராயபுரம் த.வெ.க., எம்.எல்.ஏ., சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் முகமது பைசல் ஆகியோர் பங்கேற்றனர்.
