ADDED : நவ 06, 2025 02:09 AM
ஈரோடு, ஈரோடு, ஜெகநாதபுரம் காலனி, பாரதிபுரத்தை சேர்ந்த சக்ரவர்த்தி-சந்திர
குமாரி தம்பதியினருக்கு சத்திய பிரியா,7, சஞ்சனா,4, என்ற மகள்களும், சஞ்சய்,5, மகனும் இருந்தனர். சக்ரவர்த்தி கூலி தொழிலாளி. சஞ்சய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார். தம்பதியினர் இருவரும் வெளியே சென்றதால், வீட்டுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மைய த்தில் மூவரையும் நேற்று மதியம் விட்டு சென்றனர்.
சிறுநீர் கழிப்பதாக கூறி அங்கன்வாடி மையத்தில் சஞ்சய் வெளியே சென்றார். அதன் பின் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தனர். அங்கன்வாடி மையத்துக்கு அருகில் பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. எனவே சிறுவன் ஓடை நீரில் விளையாட சென்றிருக்கலாம் என கருதி போலீசார், தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் ஓடையில் இறங்கிய துாரத்தில் இருந்து, ஒரு கி.மீ துாரம் தள்ளி ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

