/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை
/
அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை
ADDED : பிப் 03, 2024 04:15 AM
ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட இளைஞரணி சார்பில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைப்போம் என்பதை வலியுறுத்தி, ஈரோட்டில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் இருந்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும், என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை கடைக்காரர்கள், வணிகர்கள், பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, இதுபோன்ற பேரணி அவசியமாகும்,'' என்றார்.
பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
கடையின் பெயர் பலகையை தமிழில் வைக்கும்போது, அவர்களது ஜி.எஸ்.டி.,யில் குறிப்பிட்டுள்ள பெயர் மாறும். அப்போது ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பிற கணக்கு தாக்கலில் பிரச்னை ஏற்படும் என அரசிடம் தெரிவித்தபோது, 'கடையின் பெயரை அப்படியே ஆங்கிலத்திலும், தமிழிலும் பயன்படுத்தி கொள்ளலாம்' என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான கடைக்காரர்கள், தமிழில்தான் பெயர் பலகை வைத்துள்ளனர். பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் முழுமையாக ஆங்கிலத்தில் பெயர் வைத்ததுடன், தமிழில் பெயரை குறிப்பிடுவதில்லை. அவர்களையும் முழுமையாக தமிழில் மாற்றச் செய்ய வேண்டும். வரும், 7ல் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது இது தொடர்பான சட்ட பிரச்னைகளை அப்போது தெரிவித்து தீர்வு காண்போம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுக்கிறது. இப்போக்கை மாற்றாவிட்டால், வரும் காலங்களில் அவர்களிடம் இன்சூரன்ஸ் செய்ய மாட்டோம்.
இவ்வாறு கூறினார்.

