ADDED : ஆக 28, 2026 06:42 AM

ஈரோடு:ஆவணி
அவிட்டத்தன்று, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள், நீர்நிலைகள்
அல்லது கோவில்களுக்கு சென்று புதிய பூணுாலை மாற்றிக் கொள்வது முக்கிய
சடங்காக உள்ளது.
இதன்படி நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி,
காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ராகு, கேது பரிகார
ஸ்தலமான ஸ்ரீநாகர் ஆலயத்தில், பூணுால் மாற்றும் வைபவம் நடைபெற்றது.
காலை 6:00 மணிக்கு காயத்ரி மந்திரத்துடன் ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து, பிராமணர்கள் சிறப்பு பூஜை செய்து, தங்களது பழைய பூணுாலை
மாற்றிவிட்டு, புதியதை அணிந்து கொண்டனர். ஆலயத்தலைவர் ஜெயபிரகாஷ்,
குருக்கள் அங்குராஜ் சாஸ்திரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.*
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த விழாவில் மூலவர்,
உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கு பூணுால்
அணிவிக்கப்பட்டது. சென்னிமலை ஆதி சைவ அர்ச்சக அறக்கட்டளை
சார்பாக, அனைத்து மார்க்கண்டேய குல சிவாச்சாரியார்கள் அனைவரும்
நேற்று காலை 11:00 மணியளவில் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில்
உள்ள கைலாசநாதர் கோவிலில் திரண்டு பூணுால் மாற்றிக் கொண்டனர்.
