sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 07, 2024 10:52 AM

Google News

ADDED : ஜன 07, 2024 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூரில் இன்று

வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து, அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளியில், இன்று மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 5,௦௦௦க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை, இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதியதில்தொழிலாளி பலி

ஈரோடு காவேரி-ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட தண்டவாள பகுதியில், வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் சின்னப்பாபுதுாரை சேர்ந்த பாண்டியராஜன் மகன் சித்தார்த்தன், 32, என தெரிந்தது. பள்ளிபாளையத்தில் உள்ள சகோதரரை பார்க்கவந்து விட்டு, தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி பலியானது தெரிந்தது. திருப்பூர் பனியன் கம்பெனியில் அவர் தொழிலாளியாக வேலை பார்த்தார். திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்ததும் தெரியவந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்தஇளம்பெண் விபரீத முடிவு

ஈரோடு, சூரம்பட்டி வ.உ.சி., மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி கார்த்திகா, 34; மாவு அரைக்கும் மில் வைத்து நடத்தி வந்தார். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களுக்கு முன் கணவனை பிரிந்து வாழ்ந்தார். சில தினங்களாக மன வேதனையில் இருந்த கார்த்திகா, வீட்டு மின் விசிறியில் துாக்கு போட்டு கொண்டார். கார்த்திகாவின் தாய் காமாட்சி, இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோட்டில் 3 மி.மீ., மழை ஈரோடு மாநகரில் நேற்று முன் தினம், 3 மி.மீ., மழை பதிவானது. பவானிசாகரில், 1 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. அதேசமயம் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிர் நிலவியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

செல்போன் பழுது நீக்கஇலவச பயிற்சிக்கு அழைப்புஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளத்தில் இயங்கும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் செல்போன் பழுது நீக்கம் செய்வதற்கான இலவச பயிற்சி, வரும், 23ம் தேதி முதல் பிப்., 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். விருப்பம் உள்ளவர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

எலக்ட்ரிக் மொபட் மீது பஸ் மோதி மாணவி பலி

கோபி, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த ரவியின் மகள் சுவர்ணா, 19; கோபி அருகே இன்ஜினியரிங் கல்லுாரியில், பி.இ., இரண்டாமாண்டு படித்தார். கல்லுாரிக்கு எலக்ட்ரிக் மொபட்டில், வெள்ளாளபாளையம் பிரிவு அருகே நேற்று காலை, 8:45 மணிக்கு சென்றார். அப்போது அதே கல்லுாரியை சேர்ந்த பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். கோபி போலீசார் மாணவி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர், சத்தியை சேர்ந்த ஸ்ரீராம், 23, மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோபி இந்து முன்னணிசெயற்குழு கூட்டம்

கோபி நகர இந்து முன்னணி சிறப்பு செயற்குழு கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் பேசினார். வரும், 26ம் தேதி, இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு புளியம்பட்டியில் நடத்த வேண்டும். அந்த மாநாடு குறித்து சுவர் விளம்பரங்கள் செய்ய வேண்டும். குற்ற சம்பவங்களை கண்டித்து, கோபியில் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றினர்.

சுகாதார மேலாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, தேசிய சுகாதார திட்டத்தில், பொது சுகாதார மேலாளர் பணியிடம், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாதம், 25,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட உள்ளனர். எம்.எஸ்.சி., விலங்கியலுடன் எண்டமாலஜி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படை என்பதால் பணிவரன் முறை, நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கல்வி சான்று நகல், புகைப்படத்துடன் விண்ணப்பத்தை வரும், 19ம் தேதிக்குள், 'ஆணையர், ஈரோடு மாநகராட்சி, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு,' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேவாணி தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு

அத்தாணி அருகே மேவாணியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில், மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பாக, ஆராட்டு விழா நடக்கும். இதன்படி கீழ்வாணி பவானி ஆற்றில், ஐயப்ப சுவாமிக்கு, நேற்று ஆராட்டு விழா நடந்தது.

இதை தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் செய்து, குதிரை, நாட்டு பசு மாட்டுடன், சிலையை பக்தர்கள் தோளில் சுமந்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றுனர்.

தர்மசாஸ்தா கோவிலை அடைந்ததும், 1,008 கிலோவில் பல வகையான பூக்களை வைத்து, புஷ்பாஞ்சலி செய்தனர். நிகழ்வில் மேவாணி, கீழ்வாணி, மூங்கில்பட்டியை சேர்ந்த ஆயிரக்கணக்கான

பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகள் மாயம்: தாய் புகார்

ஈரோடு, மூலப்பாளையம், பாரதிநகர் காந்திஜி இரண்டாவது வீதியை சேர்ந்தவர் லத்தீப். கால் டாக்சி டிரைவர். இவரின் மகள் ரசிதா, 18; கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி கல்லுாரிக்கு

வழக்கம்போல் சென்றார். இந்நிலையில் அன்று மதியம் கல்லுாரிக்கு செல்லாதது தெரிய வந்தது.

அக்கம்பக்கத்தினர், உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும், மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் பாத்திமா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

* சத்தியமங்கலத்தை அடுத்த மலையடிபுதுார், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பண்ணாரி. இவரின், 17 வயது மகள் சத்தியில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், வேலைக்கு சென்று வந்தார். கடந்த,

3ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாய் பண்ணாரி புகாரில், சத்தி போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.

பாரியூர் காளியம்மன்

கோவிலில் குண்டம்

விழா பணிகள் தீவிரம்

கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு, இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இதனால் தற்போதே குண்டம் அமைக்க தேவையான விறகுகளை, பக்தர்கள் அனுப்பி வைக்க தொடங்கியுள்ளனர். அதேசமயம் தேரோட்டத்துக்காக, இரு தேர்களை அலங்கரிக்கும், அலங்காரத்துணிகளை தயார் படுத்தும் பணி நேற்று நடந்தது.

பாரியூர் வகையறா கோவிலான, அமரபணீஸ்வரர் கோவில் வளாக பூஜை அறையில் இருந்த, அலங்காரத்துணிகள் நேற்று வெளியே எடுத்து, தயார் படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். திருவிழாவின் பொழுதுபோக்கு அம்சமாக துாரி, ராட்டினம், ஜெயன்ட் வீல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி நேற்று தீவிரமாக நடந்தது.

ரூ.1.23 கோடிக்கு

கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 3,120 மூட்டைகளில், 1.51 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 73.65 ரூபாய் முதல், 87.65 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம், 16.05 ரூபாய் முதல், 80.39 ரூபாய் வரை விற்றது. மொத்தம், ௧.23 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

பொங்கல் பரிசு தொகுப்புக்கு

இன்று முதல் டோக்கன்

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாமில் வசிப்போர், ஆதரவற்றோர் போன்றோருக்கு டோக்கன் வினியோகித்து, குறிப்பிட்ட நாளில் பரிசு தொகுப்பை பெற திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் உள்ள, 7.66 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க, டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் ரேஷன் பணியாளர்கள் மூலம், இன்று முதல் வழங்க உள்ளனர்.

அத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருட்கள் ஓரிரு நாளில் ரேஷன் கடைகளுக்கு வர உள்ள நிலையில், இலவச வேட்டி, சேலைகளும் மூன்று நாட்களாக ரேஷன் கடைகளுக்கு சென்றடைந்துள்ளன. பொங்கல் பரிசு தொகுப்புடன் இவற்றையும் வழங்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

குண்டம் விழாவில் தற்காலிக கடை

ரூ.76 லட்சத்துக்கு சுங்க வசூல் ஏலம்

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம், 76 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 11ம் தேதி தீ மிதி விழா, 12ம் தேதி தேரோட்டம், 13ம் தேதி மலர் பல்லக்கு ஊர்வலம், 20ம் தேதி மறு பூஜை நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஜன.,8ம் தேதி முதல் 20ம் தேதி வரை, 13 நாட்களுக்கு தற்காலிக கடைகள் நடத்த சுங்கம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கான ஏலம் நடந்தது. இதில் கோபியை சேர்ந்த குமார், 76.20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு ஏலத்தை காட்டிலும், பத்து லட்சம் ரூபாய் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மல்லிகை பூ கிலோ ரூ.1,180

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,180 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ ஒரு கிலோ, 640, காக்கடா-350, ஜாதி முல்லை-600, செண்டுமல்லி-56, கோழிகொண்டை-40, சம்பங்கி-30, அரளி-70, துளசி-40, செவ்வந்தி- 140 ரூபாய்க்கும் விற்பனையானது.

ரூ.10.46 லட்சத்துக்கு வாழை, தேங்காய் ஏலம்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 32 ரூபாய், நேந்திரன், 21 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 410 ரூபாய்க்கும், தேன்வாழை, 460, செவ்வாழை, 800, ரஸ்த்தாளி, 490, ரொபஸ்டா, 360, மொந்தன் மற்றும் பச்சைநாடான், தலா, 310 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,700 வாழைத்தார்களும் ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், 13,940 காய்கள் வரத்தாகின. ஒரு காய் ஏழு ரூபாய் முதல், 17 ரூபாய் வரை, 1.46 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

ரூ.2.12 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 20,863 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 24.43 ரூபாய் முதல், 27.40 ரூபாய் வரை, 8,257 கிலோ தேங்காய், இரண்டு லட்சத்து, 12,425 ரூபாய்க்கு விலை போனது.

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் போச்சோவில் கைது

திருப்பூர், ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 35; இவர், 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறவே, காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தனர். விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தில், ஹரிபிரசாத்தை கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

இரு குழந்தைகளின் தாய் விபரீத முடிவு

காங்கேயம், ஊதியூர் அருகே உள்ள நிழலியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ். இவரின் மனைவி பனிமொழி, 31; ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம்பதிக்கு, இரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பனிமொழி, இரண்டு தினங்களுக்கு முன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பனிமொழியின் தந்தை தங்கவேல் புகாரின்படி, ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர். மணமாகி ஆறு ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

11 புதிய மஞ்சள் நிற பஸ்திருப்பூருக்கு வந்தாச்சு

திருப்பூரில் இருந்து, பிற பகுதிகளுக்கு, 11 புதிய மஞ்சள் நிற பஸ்கள் இயக்கப்படுகிறது.

மஞ்சள் நிற பஸ்களை அரசு போக்குவரத்து கழகம், டிச., துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பரீட்சார்த்த முறையில், ஒவ்வொரு கோட்டம், கிளைகளுக்கு, பிரத்யேக பாதைகளில், பத்து சதவீதம் பஸ்கள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவைக்கு இரண்டு பஸ்கள், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஈரோடு வழி மேட்டூர், உடுமலை, பழநி, தேனி, சேலம், ஈரோடு - திருப்பூர் - பழனி என, 11 வழித்தடங்களுக்கு, மஞ்சள் நிற பஸ்கள் தருவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 4 ம் தேதி முதல் இந்த பஸ்கள் மத்திய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பலாத்கார வழக்கில்

தொழிலாளிக்கு 20 ஆண்டு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் வசித்தவர் மணிமுத்து, 35, கூலி தொழிலாளி. கடந்த, 2019 ஆக., மாதம், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் மகளிர் போலீசார், கைது செய்து, 'போக்சோ' சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி பாலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், மணிமுத்துவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.

திருப்பூரில் மேம்படுத்தப்பட்ட

புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு

திருப்பூர் மாநகராட்சியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பி.என்.ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கடைகள் அமைந்த வணிக வளாகம், வாகன பார்க்கிங் வளாகம்; கண்காணிப்பு கேமராக்கள், லிப்ட், எஸ்கலேட்டர் வசதி, கழிப்பிடங்கள் உட்பட வசதிகளுடன் 30.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளாகத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து கணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் வளாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தாராபுரத்தில் இன்று முதல்

பொங்கல் பரிசு டோக்கன்

அரசு வழங்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன், தாராபுரம் நகராட்சியில் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரும், 10ம் தேதி முதல், நியாயவிலை கடைகளில், அரிசி கார்டு தாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதனால் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கு வகையில், பயனாளிகளுக்கு இன்று முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. தாராபுரம் நகரில் உள்ள, 17 கடைகள் உட்பட, தாராபுரம் வட்டம் முழுவதும், 59 பகுதி நேர ரேஷன் கடைகள் என, 179 ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us