sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 11, 2024 11:28 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர்வளத்துறையில்

டிரைவர் பணிக்கு அழைப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள நீர்வளத்துறை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள, 2 ஜீப் ஓட்டுனர் பணிகள் நிரப்பப்பட உள்ளது.

ஊதியம், 19,500 முதல், 71,900 ரூபாய் வரை ஏற்ற முறையில் வழங்கப்படும். வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்களுடன், அனுபவ அடிப்படையிலானவர்களும் வரும் பிப்., 2க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு மாவட்ட நீர் வளத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

பொறுப்பேற்புசென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், கோவை சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து நேற்று புதிய இன்ஸ்பெக்டராக செந்தில் பிரபு, 40, பொறுப்பேற்றார்.

கபாலீஸ்வரர் கோவிலில்

'சிசிடிவி' கேமரா பொருத்தம்

ஈரோட்டில், பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு, விசேஷ நாட்கள் மட்டுமின்றி, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கோவில், பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஆங்காங்கே, 10 'சிசிடிவி' கேமரா வைக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், ரூ.1 லட்சம் மதிப்பில், கூடுதலாக, 10 'சிசிடிவி' கேமராக்களை, கோவில் நிர்வாகம் பொருத்தியுள்ளது. குறிப்பாக, சமையல் அறைக்கூடம், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவில் பாதுகாப்புக்கு 475 போலீசார்

கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான விழா கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. குண்டம் விழா இன்று அதிகாலை நடக்கிறது. இதில் விரதம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்த உள்ளனர். குண்டம் விழாவில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என கருதப்படுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவின்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி., 2 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என, 475 பேர் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் வெடிகுண்டு பரிசோதனை குழுவும் உடன் சென்றுள்ளது. மேலும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சு வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரூ.2.33 லட்சத்துக்கு

2 வாகனங்கள் ஏலம்

பொதுமக்களுக்கு கவர்ச்சிகர, பண இரட்டிப்பு ஆசைகாட்டி முதலீடு பெற்று ஏமாற்றி, மோசடி செய்த நிறுவனங்களான சுசி ஈமு பார்ம்சின் அசையும் சொத்தான ஸ்வராஜ் வேன், ராஜ ராஜேஸ்வரி பவுல்ட்ரி நிறுவனத்தின் ஹீரோ ஹோண்டா பைக்கை, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இரு வாகனங்களையும், பொது ஏலத்தில் விட நீதிமன்றம் அனுமதியளித்தது. கடந்த, 9ல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் நான்கு பேர் பங்கேற்றனர். இதில் ஸ்வராஜ் வேன் இரண்டு லட்சத்து, 27 ஆயிரத்துக்கும், பைக், 6,500 ரூபாய்க்கும் ஏலம் போனது.

கோவிலுக்கு வந்த பெண் மாயம்கர்நாடக மாநிலம், உடையர்பாளையத்தை சேர்ந்தவர் நாகசுந்தரம், பெயின்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன், பண்ணாரி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது தனது மகள் நந்தினி, 21, பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகழுவ சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கோவில் முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. நேற்று நாகசுந்தரம் அளித்த புகார்படி, சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.1.73 லட்சத்துக்குநிலக்கடலை விற்பனை

ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 69 மூட்டைகளில் நிலக்கடலையை வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

ஒரு கிலோ நிலக்கடலை, 80.20 முதல், 82.21 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 2,186 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 374 ரூபாய்க்கு விலை போனது.

ரூ.97 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ. 97 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 2,514 மூட்டைகளில், 1,21,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 67.29, அதிகபட்சமாக, 86.19 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 15.21, அதிகபட்சமாக, 81.16 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், 97 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

விற்பனை சங்கத்தில்வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.3.95 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை நடந்தது.

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள், 2,654 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கதளி 1 கிலோ, 34, நேந்திரன், 21, பூவன் தார், 600, ரஸ்தாளி, 630, தேன்வாழை, 680, செவ்வாழை, 980, ரொபஸ்டா, 410, பச்சைநாடான், 380 என மொத்தம் மூன்று லட்சத்து, 95 ஆயிரத்து, 436 ரூபாய்க்கு விற்பனையானது.

சிறுமிக்கு கருக்கலைப்புஉதவியவர் கைது

திருப்பூர் மாவட்டம். தாராபுரம் அருகே கூலித் தொழிலாளியின், 15 வயது மகள், அப் பகுதியில் உள்ள, 72 வயது முதியவரிடம் எதார்த்தமாக பழகிய போது, அதை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான, 72 வயது ராஜேந்திரன் மற்றும் சிறுமியின் கருவை கலைத்ததாக அரசு மருத்துவ செவிலியர் உஷாராணி ஆகியோர், கைது செய்யப்பட்டு கடந்த டிச.,29ல், சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கருக்கலைப்பு செய்ய உதவியதாக சரவணன், 53, என்பவரை, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று கைது செய்து திருப்பூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ரயில்வே இன்ஸ்பெக்டர்பணியிட மாற்றம்

ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கிருஷ்ணன், விருதாச்சலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். போத்தனுார் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரியா சாய் ஸ்ரீ, ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த தனலட்சுமி, போத்தனுார் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ரயில்வே ஏ.டி.ஜி.பி., வனிதா பிறப்பித்துள்ளார்.

மஞ்சப்பை

விருது பெற அழைப்பு

'மஞ்சப்பை' பயன்பாட்டு பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள், வணிக வளாகங்களுக்கு 'மஞ்சப்பை விருது' வழங்கப்படுகிறது.

இதன்படி பிளாஸ்டிக் கைப்பைக்கு பதில், துணியாலான மஞ்சப்பை வழங்கியும், பயன்படுத்தியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஊக்குவிப்பை செய்யும், 3 சிறந்த பள்ளிகள், 2 கல்லுாரிகள், 3 வணிக வளாகங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதல், 3 பரிசாக, 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணைய தளம், erode.nic.in ல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் இணைப்புகள், கூடுதல் விபரங்களை இணைத்து வரும் மே, 1க்குள் சமர்பிக்க வேண்டும்.

ஈரோடு மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு

ஜார்கண்டின், 31வது சப் ஜூனியர், 46வது சீனியர் துரோ பால் சாம்பியன்ஷிப் -2023 போட்டி, கடந்த டிச., 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தமிழக சீனியர் மகளிர் அணி முதல் பரிசையும், சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி மூன்றாம் பரிசையும் பெற்றது.

சீனியர் மகளிர் அணிக்காக ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் தனுஸ்ரீ, ஸ்ரீ நித்தி, ஆர்.டி நேஷனல் கலை அறிவியல் கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி, சப் ஜூனியர் அணிக்காக கார்மல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யா ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு, தமிழகத்துக்கு பெருமை தேடி தந்தனர்.

தமிழக எறிபந்து கழக செயலர் சர்வேசன், ஈரோடு எறிப்பந்து கழக செயலர் பிரபு, மாணவிகள் தனுஸ்ரீ,

ஸ்ரீ நித்தி, திவ்யதர்ஷினி, நித்யா ஸ்ரீ ஆகியோருக்கு, அமைச்சர் முத்துசாமி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரயில்வே தொழிலாளர்கள்

ஈரோட்டில் உண்ணாவிரதம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச சம்பளம், 32,500 ரூபாய் வழங்க வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தொழிற்சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சதர்ன் ரயில்வே எம்ப்ளாய் சங்கத்தின் (எஸ்.ஆர்.இ.எஸ்) சேலம் கோட்டம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உண்ணாவிரதம் நடந்தது.

கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.இ.எஸ். லோகோ ரன்னிங் சங்க செயல் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் சிறப்புரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி சார்பில்செயற்குழு கூட்டம்

இந்து முன்னணியின், ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில், செயற்குழு கூட்டம் கோபியில் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் பேசினார்.

புன்செய் புளியம்பட்டியில் வரும், 26ல், இந்துக்கள் பாதுகாப்பு மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும்.

ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், 15 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், துணை தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

லாரி மீது பைக் மோதிய

விபத்தில் வாலிபர் பலி

சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, எம்.பி.என்., காலனியை சேர்ந்த மகேஸ்வரன் மகன் பூபாலன், 27. இவர் சென்னிமலை டவுன், காந்தி நகரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆகி நித்யா, ஏழு மாதமே ஆன ஜோஸ் மாரன் என்ற குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில் கடைக்கு வருவதற்காக தனது பல்சர் பைக்கில் சென்னிமலை ரோட்டில், அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தார்.

அப்போது ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்தவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

புரோக்கர் அடித்துக்கொலை

2 'குடி'மகன்கள் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இ.பி., அலுவலக சாலையை சேர்ந்தவர் ரங்கராஜ்குமார், 42. ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு சித்தோடு, ஓடக்காட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே, 'குடி'போதையில் குடும்ப பிரச்னை தொடர்பாக மொபைல் போனில் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு, பள்ளபாளையம், கீழ்கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி அசோக், 27, வாய்க்கால்மேடு, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி நல்லமுத்து, 40, ஆகியோர், போதையில் நின்றிருந்தனர். அவர்களை ரங்கராஜ்குமார் திட்டியதாக கருதியுள்ளனர். இதனால் அந்த இருவரும், ரங்கராஜ்குமாரிடம் தகராறு செய்துள்ளனர்.

அதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அசோக், கட்டையால் ரங்கராஜ்குமார் தலையில் தாக்கினார். அதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

சித்தோடு போலீசார், உடலை கைப்பற்றி, அசோக், நல்லமுத்துவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us