ADDED : ஜன 17, 2024 10:48 AM
ஆயுதப்படையில் பொங்கல்
விழா; ஏ.டி.ஜி.பி., பங்கேற்பு
ஈரோடு, ஆணைக்கல்பாளையத்தில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில், ஈரோடு மாவட்ட போலீசார், நேற்று பொங்கல் விழா கொண்டாடினர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். ரேக்ளா வண்டியில் வைத்து ஏ.டி.ஜி.பி., அருண் மற்றும் குடும்பத்தாரை அழைத்து வந்தனர். எஸ்.பி., ஜவகர் வரவேற்றார். காவலர்கள், காவல் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தார் இணைந்து பொங்கல் வைத்தனர். முன்னதாக போலீஸார், அவர்களது குடும்பத்தாருக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பூஜைக்கு பின், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் உணவு வழங்கினர்.
பேரேஜ் பாலம் அருகில்
தவறி விழுந்தவர் சாவு
பாசூர் - சோழசிராமணி பேரேஜ் பாலம் அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, பாசூர் வி.ஏ.ஓ., சவுசல்யா, மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தார். மலையம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பைக்கில் சோழசிராமணிக்கு சென்றபோது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. அவரது பையில் இருந்த லைசென்ஸில், 'பிரபு, 42, சிலுவை முத்துகோட்டை, நவாப்பட்டி, மேட்டூர் தாலுகா, சேலம் மாவட்டம்' என குறிப்பிட்டிருந்தது. மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வினாடி - வினா போட்டிமக்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் தேர்தல் நடைமுறையில் வாக்காளர்கள் பங்கேற்பதை அதிகரிக்கும் வகையில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவில் மக்களுக்கான வினாடி-வினா போட்டி வரும், 21ம் தேதி காலை, 11:00 மணி முதல், 11:15 மணி வரை நடக்க உள்ளது. பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர், விபரத்தை, https://www.erolls.tn.gov.in/Quiz2024ல், நாளை, நாளை மறுதினம் பதிவு செய்யலாம். 'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் போட்டி நடக்கும்.
கொங்கலம்மன் கோவிலில்தைப்பூச விழா தொடக்கம்
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா, பூச்சாட்டு தலுடன் நேற்று தொடங்கியது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, இன்று காலை தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். இதை தொடர்ந்து கோவில் கொடிமரத்தில்,
பூசாரிகள் திருவிழா கொடியேற்றுவர். 23-ம் தேதி பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. தேரோட்டம், 25-ம்தேதி காலை, 8:45 மணிக்கு நடக்கிறது.
வாய்க்காலில் மிதந்தமூதாட்டி உடல் மீட்பு
கோபி அருகே வேட்டைக்காரன் கோவில், கீழ்பவானி வாயக்காலில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதிப்பதாக, கோபி போலீசார்ருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில் கோபி அருகே ஓடத்துறையை சேர்ந்த பழனியம்மாள், 75, என தெரிந்தது. அவரின் மகள் கனகவள்ளி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி சாவுநம்பியூரை அடுத்த கே.மேட்டுப்பாளையம், கே.ஏ.எஸ் நகரை சேர்ந்தவர் ராமசாமி, 44, கூலி தொழிலாளி. மூனாம்பள்ளியில் உள்ள மகள் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். இரவு, 9:30 மணி அளவில் மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். குருமந்துார்-நம்பியூர் சாலையில் கே.மேட்டுப்பாளையத்தில் மில் அருகே சென்றபோது, பெட்ரோல் தீர்ந்தால் மொபட்டை தள்ளி சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். புகாரின்படி நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வனப்பகுதி கோவிலில்உருவ பொம்மை வழிபாடு
டி.என்.பாளையம் அருகே புஞ்சை துறையம்பாளையம் கிராமத்தில், அடர்ந்த வனப்பகுதியில் நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு மாட்டுப் பொங்கல் நாளில் ஆடு, மாடு, யானை, நாய், மனிதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.
இதன்படி நடப்பாண்டு மாட்டுப்பொங்கல் தினமான நேற்று, உருவ பொம்மை வைத்து மக்கள் வழிபட்டனர். இதனால் கால்நடைகளை நோய் தாக்காது, விலங்குகளால் தாக்கப்படாது என்றும் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பங்களாபுதுார், கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மாட்டு பொங்கல் விழா கோலாகலம்
ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை, மக்கள் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
கால்நடைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசினர். பின் அலங்காரம் செய்து, புது கயிறுகளை அணிவித்தனர். முன்னதாகவே கொம்புகளை சீவி, வர்ணம் பூசினர்.
தொழுவத்தை சுத்தம் செய்து அலங்கரித்து, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர். மாட்டு வண்டிகளை இயக்கும் தொழிலாளர்கள், ஈரோட்டில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் மாடுகளை நீராட்டி, வர்ணம் பூசி அலங்கரித்தனர்.
பின் வீட்டுக்கு சென்று, மாடுகளுக்கு பூஜை செய்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோசாலைகளில், கோமாதா பூஜை கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆடுகளை கொன்ற சிறுத்தை
பவானிசாகர் அருகே அச்சம்
பவானிசாகரை அடுத்த காந்திநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்புராஜ். இவர், 10க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை வீட்டு முன்புள்ள கொட்டகையில் அடைத்து சென்றார். நேற்று காலை சென்றபோது மூன்று வெள்ளாடுகள் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தன. சிறுத்தையின் கால் தடமும் தென்பட்டது. இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் ஆய்வில், ஆடுகளை கொன்றது சிறுத்தை என்பதை உறுதியானது. ஊருக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகளை கொன்றது, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சிறுத்தையின் நடமாட்டத்தை கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மாலை மற்றும் இரவு நேரங்களில், அனாவசியமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்' என்று, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்தில் வாலிபர் பலி
சென்னிமலை, முகாசிபிடாரியூர் ஊராட்சி, களத்துகாட்டை சேர்ந்தவர் இனியன், 24; ஈங்கூரில் மாமியார் வீட்டில் தங்கியிருந்து, வவ்வால்காடு பகுதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பல்சர் பைக்கில் வீட்டுக்கு சென்றபோது, ஈங்கூர் ரயில்வே மேம்பாலத்தில் இடதுபுற கைப்பிடி சுவரில் மோதி சாலையில் விழுந்ததில், தலையில் பலத்த காய மடைந்து பலியானார்.
சேவல் சூதாட்டத்தில்
ஈடுபட்ட 35 பேர் கைது
காங்கேயம் அருகே பழையகோட்டைபுதுாரில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்தில் ஈடுபட்டபோது கண்ணியக்கிணறு பகுதியில், சேவலை வைத்து சூதாட்டம் நடந்ததை கண்டுபிடித்தனர். அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட, 30 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது சேவல், மூன்று கார், ஆறு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாகவுண்டன்வலசில், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ௨௪ வயது முதல், ௪௩ வயது வரையிலான ஐந்து பேரை, வெ ள்ளகோவில் போலீசார் கைது செய்து, மூன்று சேவல், 2,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பொதுத்தேர்வு மாணவருக்கு நாளை முதல் ஆய்வக பயிற்சி
பிப்., இரண்டாவது வாரம் செய்முறை தேர்வு நடக்கவுள்ள நிலையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக பயிற்சி நாளை முதல் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவருக்கு, மார்ச், 1ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச், 4ம் தேதி பொதுத்தேர்வு துவங்குகிறது. அதற்கு, 15 நாட்களுக்கு முன்பாக செய்முறை தேர்வை முடிக்க தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது. ஆகையால், பிப்., 12 முதல், 17ம் தேதி வரை செய்முறை தேர்வை நடத்தி முடிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதவுள்ள, மாணவ, மாணவியரை செய்முறை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக, நாளை (18ம் தேதி) முதல் பள்ளிகளில் ஆய்வக பயிற்சி துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் இருந்து, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கட்சி ஆபீசில்
சமத்துவ பொங்கல் விழா
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில், செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். விழாவில் அறுசுவை உணவுடன் பொங்கல் வழங்கப்பட்டது. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
'பொங்கி' வருமா புது வெள்ளம்!
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறும் என்ற உத்தரவாதத்துடன் திட்டப்பணி நிறைவு பெற்று, வெள்ளோட்ட அடிப்படையில் உள்ளது.
வெள்ளோட்டம் பார்க்கும் பணி, 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டமிடலில், நீர்வளத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திட்டத்தை செயல்படுத்த தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் முயற்சி மேற்கொண்டாலும், அ.தி.மு.க., ஆட்சியில் தான், திட்டம் உயிர் பெற்றது. இந்நிலையில், திட்டம் முடிவுற்ற நிலையில், 'திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தி.மு.க., அரசு ஆர்வம் காட்டவில்லை' என, அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். 'திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது; வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது; நிறைகுறைகள் சரி செய்த பின், திட்டம் செயல்பாட்டுக்கு வரும்,' என, தி.மு.க., அரசு கூறி வருகிறது. எனவே, தை பிறந்துள்ள நிலையில் அத்திக்கடவு திட்டத்துக்கு வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

