ADDED : பிப் 05, 2024 11:12 AM
ரூ.51 லட்சம் மதிப்பில்
நம்பியூரில் வளர்ச்சி பணி
நம்பியூர் யூனியன் கோசணம் ஊராட்சியில், கே.மேட்டுப்பாளையம், பருத்திக்காட்டுமேடு, திருமநாதம்பாளையம்-நால்ரோடு பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க தலா, 17 லட்சம் ரூபாய் என, ௫௧ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணி நேற்று தொடங்கியது. கோசணம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி தலைமையில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, நம்பியூர் யூனியன் சேர்மேன் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.
நீர் நிலை பாதுகாப்பு
ஆலோசனை கூட்டம்
இந்து முன்னணி சார்பில், ஜல்லிக்குட்டை நீர் நிலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜல்லிக்குட்டை நீர்த்தேக்கத்தில் எவ்வித ஆக்கிரமிப்பையும் அனுமதிக்கக் கூடாது.
இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்த விவசாயி நிலத்தில் கால்நடை தீவனத்துக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து வரும், 27ம் தேதி விவசாயிகள் உரிமை மீட்பு கூட்டம் நடத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு பள்ளியில் விதி மீறி
கராத்தே ஆசிரியர் நியமனம்
ஈரோடு மாவட்ட ட்ரடிஷனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சம்பத்துவிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆண்டில் மூன்று மாதம் தற்காப்பு கலை பயிற்சியாக, இரு ஆண்டுகளாக கராத்தே வகுப்பு எடுத்து வருகிறோம். இதற்கென உரிய தகுதி வேண்டும். ஆனால் தற்போது ஓடாநிலை, சின்ன சேமூர், அறச்சலுார் உள்ளிட்ட சில பள்ளிகளில் இளம் வயது கராத்தே ஆசிரியர்கள் கராத்தே கற்று தருகின்றனர். விதிமீறிய இந்த நியமனத்துக்கு, கல்வித்துறை அலுவலர்கள் சிலரும் துணையாக செயல்படுகின்றனர். இளம் வயது கராத்தே ஆசிரியர்களை, மாணவிகளுக்கு கராத்தே கற்று கொடுக்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கணவனை பிரிந்த
இளம்பெண் தற்கொலை
பவானி, காமராஜ் நகர் இரண்டாவது வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஞானராஜ். இவரின் மகள் பெல்சியா மெர்லின், 35; சென்னை அருகே அரக்கோணத்தை சேர்ந்த சேர்ந்த ஸ்டாலின் மில்லர் என்பவருடன், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்து ஓராண்டாக பெற்றோர் வீட்டில் பெல்சியா மெர்லின் வசித்தார். நேற்று காலை வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிச்சைக்காரர் கொலை?
சித்தோடு நால்ரோடு அருகே, பெருந்துறை செல்லும் ரோட்டில் உள்ள நிழற்கூடத்தில் தங்கி, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், 10 ஆண்டுகளாக அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதி ஓட்டலில் பணிபுரியும் புரோட்டா மாஸ்டர் ஜெயமணி, 65, என்பவருடன் சேர்ந்து முதியவர் மது குடித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்டுள்ளனர். இதில் நெற்றியில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்தில் இறந்தார். சித்தோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயமணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் எஸ்.ஐ., படுகாயம்
கோவை, கோவை புதுார், லட்சுமி நகரை சேர்ந்தவர் சரவணன், 57; கோவை புதுார் நான்காவது பட்டாலியன் பிரிவு போலீஸில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில், பாதுகாப்பு பணி முடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்கில், ரங்கம்பாளையத்தில் இருந்து திண்டல் செல்லும் ரிங் ரோட்டில் சென்றார். குச்சி கிழங்கு பாரம் ஏற்றிய லாரியை முந்த முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் வலது பக்க முன்
சக்கரத்தில் விழுந்தார்.
இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் இடது கால் தொடையில் சிதைவு ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
1,507 பேர் டி.ஆர்.பி.,
தேர்வில் பங்கேற்பு
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான (பி.டி/பி.ஆர்.டி.இ.,) தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று
நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலை தகைசால் பள்ளி, செங்குந்தர் பள்ளி, கலைமகள் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, கார்மல் பள்ளி என ஐந்து மையங்களில் நடந்தது. தேர்வெழுத, 1,552 பேர் விண்ணப்பித்த நிலையில், ௧,௫௦௭ பேர் மட்டுமே பங்கேற்றனர். 45 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பா.ம.க.,
சார்பில் பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, பா.ம.க., மற்றும் பசுமை தாயகம் சார்பில், அந்தியூர், தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் முன், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். புகை, மது போன்ற போதை பொருள்களை ஒழிக்க வலியுறுத்தும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் நிறைவு செய்தனர். நகர செயலாளர் மாதேஸ், நகர தலைவர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
1,150 கிலோ ரேஷன் அரிசி
பதுக்கிய ௪ வாலிபர் கைது
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறைக்கு, பண்ணாரி, ராஜி நகரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதி அனந்தா, 26, சிவாஜி, 26, ரவி, 26, மற்றும் சூர்யா, 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
பண்ணாரி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை பெற்று, கர்நாடகாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
பணம் பறித்த 'ரவுடி' கைது
பவானி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 40; டாஸ்மாக் கடை சேல்ஸ்மேன். நேற்று முன்தினம் இரவு பவானி-மேட்டூர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது பவானி, வர்ணபுரம் மீனாட்சி கல்யாண மண்டபம் ரோட்டை சேர்ந்த சந்திரன், 30, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். தான் மிகப்பெரிய ரவுடி எனக்கூறி, ௩00- ரூபாயை பறித்து தப்பியுள்ளார். சுரேஷ் புகாரின்படி, பவானி போலீசார் சந்திரனை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சந்திரன் மீது பவானி போலீஸ் ஸ்டேஷனில், பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அகில இந்திய ரயில் ஓட்டுனர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொருளாளர் சீனிவாச பட் முன்னிலை வகித்தார். ரயில் டிரைவர்கள் மற்றும் உதவி டிரைவர்கள் பணியின்போது, 10 மணி நேரத்துக்கும் மேலாக கை தட்டி கொண்டே செல்ல வேண்டும்.
அப்போது தான் கவனமாக வண்டி ஓட்ட முடியும் என உத்தரவு பிறப்பித்த, சேலம் கோட்ட மூத்த மின் பொறியாளர் ரவி தேஜாவை கண்டித்தும், உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். கிளை துணை செயலாளர் ரியாஷ், துணை தலைவர் அயூப் மற்றும் ரயில்வே டிரைவர்கள் பலர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

