ADDED : பிப் 16, 2024 10:21 AM
ஆஞ்சநேயர் கோவிலில்
கியூ.ஆர். கோடு வசதி
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் நன்கொடை செலுத்த வசதியாக, கியூ.ஆர்., கோடு வசதியை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ.ஆர்.,கோடு ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் சிரமமின்றி நன்கொடை செலுத்தலாம் என்றும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்ணாரி கோவிலில்
மார்ச் ௨௬ல் தீ மிதி விழா
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு விழா, வரும் மார்ச், 26ம் தேதி நடக்கிறது. முன்னதாக மார்ச், 11 ல் பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. மார்ச், 19 ல் கம்பம் நடுதல், 26ம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல், 27ல் புஷ்பரதம், 28ல் மஞ்சள் நீராட்டு விழா, 29ல் தங்கத்தேர் புறப்பாடு, ஏப்., 1ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
திடீர் இடமாற்றத்தால் போலீசார் அதிர்ச்சி
நிர்வாக காரணங்களை மேற்கொள்காட்டி, கடந்த, 13ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும், 27 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டார். இதில் எஸ்.எஸ்.ஐ.,க்கள்-5, பெண் போலீசார்-2, ௧௨ ஏட்டுகள் உள்ளிட்டோர் அடங்குவர்.
கடந்த, 14ல் இதற்கான உத்தரவு பெற்ற, 18 போலீசார், எஸ்.பி.,.யை சந்தித்து, இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, மனு கொடுத்ததனர். மனுவை எஸ்.பி., பெற்றுக்கொண்ட நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'தனிப்பிரிவு போலீசாரை அனுசரித்து போகாததால், வீண் பழி சுமத்தி இடமாற்ற உத்தரவை பெற வைத்து விட்டனர்' என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
௨வது நாளாக ரயில் டிரைவர்உண்ணாவிரத போராட்டம்
பணியை, 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். வார ஓய்வை, 40 மணி நேரமாக வழங்க வேண்டும். தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் இரண்டாவது நாளாக, ரயில் டிரைவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்ட தலைவர் அருண்குமார், கோட்ட செயலாளர் சிவகுமார், தென் மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
டாஸ்மாக் பார் ஊழியரைதாக்கிய 2 பேர் கைது
ஈரோடு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்குள்ள மது பாரில், புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ், 32, வேலை செய்கிறார். சில நாட்களுக்கு முன் பாரில் மது குடிக்க வந்த இருவர், பீர் பாட்டிலை உடைத்து சதீஷின் தலையில் தாக்கினர்.
சதீஷ் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் இருவரையும் தேடி வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஈரோடு, பெரியார் நகர், ஓடை பள்ளம், அசோகபுரி கட்டட தொழிலாளி வசந்தகுமார், 26; காசிபாளையம், சுப்பிரமணியம் நகர், கே.கே நகரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் சிவா, 30, ஆகியோரை கைது செய்தனர்.
'குட்கா' விற்பனை செய்த
3 கடைக்காரர்கள் கைது
ஈரோடு, சொக்கநாதர் வீதி, துர்கா மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப், ஹான்ஸ், விமல் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கடையில் சோதனை நடத்தியதில், புகையிலை பொருட்கள் சிக்கின. இது தொடர்பாக கடை உரிமையாளர் முகேஷ் குமார், 41, என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் லக்காபுரத்தில், பரிசல் துறை நால்ரோட்டில், புகையிலை பொருட்கள் விற்ற, காஜா மளிகை உரிமையாளர் ஜோசப் ஆரோக்கியராஜ், 37, என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் சென்னிமலை சாலையில், ஐ.டி.ஐ., எதிரே பெட்டிக்கடையில் புகையிலை விற்ற கடைக்காரர் மூர்த்தியை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கோழி இறைச்சி கடையில்
நள்ளிரவில் தீ விபத்து
ஈரோட்டில் சென்னிமலை சாலையில், டீசல் ஷெட் எதிர் ஸ்ரீபரணி பிராய்லர் கோழிக்கடை செயல்படுகிறது. இதன் உரிமையாளர் மொடக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், 49; கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், கரும்புகை அதிகம் வெளியேறியது. இதைப்பார்த்த இரவு ரோந்து போலீசார், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள், 20 நிமிடத்தில் தீயை அணைத்தனர். ஆனாலும், 150 நாட்டுக்கோழி, 100 காடை, கோழித்தீவனம் உள்ளிட்டவை எரிந்து விட்டது.
கோழி கடையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், ஈரோடு, மணல்மேட்டை சேர்ந்த மாதேஸ்வரன், 44, வசிக்கிறார். அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் டேங்க் கவருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்கள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நலத்துறையின், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், 2023-24ம் நிதியாண்டின் முதல் நவீன உயர்ரக தையல் இயந்திரங்களான ஜிக்ஜாக், பீக்கோ, எம்பிராய்டரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 20 முதல், 40 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருவாய், 72,000 ரூபாய்க்கு மிகாத வருவாயுடன் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு, தனியார் நிறுவனங்களில் ஆறு மாத தையல் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாசில்தாரால் வழங்கப்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, அசல் சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்த ஒப்புகை சீட்டு, அதன் நகலை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இணைய தளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும். கூடுதல் தகவலுக்கு, 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் அறியலாம்.
வியாபாரி உள்பட 4 பேர் மாயம்
ஈரோடு, சூரம்பட்டி கோவலன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; இவரின் மனைவி நித்யா, 29; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். குமலன்குட்டையில் ஆனந்தகுமார் மிக்சர் வியாபாரம் செய்து வந்தார். மனைவியுடன் தகராறு ஏற்படும் போதெல்லாம் கோபித்து கொண்டு மூன்று நாட்கள் வீட்டை விட்டு செல்வதும், பிறகு வீடு திரும்புவதும் வாடிக்கை. வழக்கம்போல் கடந்த, 6ம் தேதி இரவு தம்பதி இடையே தகராறு நடந்துள்ளது. அன்றிரவு மாயமானவர், வழக்கமாக திரும்பவில்லை. இதுகுறித்து நித்யா புகாரின்படி, சூரம்பட்டி போலீசார், ஆனந்தகுமாரை தேடி வருகின்றனர்.
*சூரம்பட்டி, குமரன் வீதியை சேர்ந்த வரதராஜ் மகள் புவனேஸ்வரி, 19; கேட்டரிங் வேலைக்கு செல்வதாக, கடந்த, 11ம் தேதி இரவு சென்றார். சிறிது நேரத்தில் தந்தையை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, தான் திருமணம் செய்து கொண்டதாகவும், தர்மபுரியில் இருப்பதாகவும் தெரிவித்து மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு, சூரம்பட்டி போலீசில் வரதராஜ் புகாரளித்துள்ளார்.
* ஈரோடு, வில்லரசம்பட்டி, மொக்கையன் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 29; இவரின் மனைவி இந்துமதி, 22; தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. நம்பியூரில் மாமியார் வீட்டில் தங்கி மணிகண்டன், தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். கடந்த, 13 தன் வீட்டுக்கு மனைவி, குழந்தையுடன் வந்தார். வீட்டை விட்டு வெளியே சென்று பின் மீண்டும் வீடு திரும்பிய போது மனைவி, குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
'ஆ.ராசாவுக்கு டிபாசிட் கிடைக்காது'
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் கணிப்பு
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ., பிரிவு பிரதிநிதிகள் மாநாடு, புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசித்தனர். மேட்டுப்பாளையம் பகுதி வழக்கறிஞர்கள், தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகரன், பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நந்தகுமார் கூறியதாவது: மத்திய அமைச்சர் முருகன் குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு தரக்குறைவாக பேசியதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க.,வை போல் அல்லாமல் அனைவரையும் சரி சமமாக பார்க்கக்ககூடிய கட்சி பா.ஜ., ஆகும். நீலகிரி தொகுதியில் இரண்டாவது முறை எம்.பி.,யாக இருக்கும் ஆ.ராசா தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த முறை டிபாசிட் கூட வாங்க முடியாமல் தொகுதியை விட்டு வெளியேறப்போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம விலங்கு கடித்து
மூன்று ஆடுகள் பலி
கோபி அருகே ஒத்தக்குதிரையை சேர்ந்தவர் சிவக்குமார், 47, கூலி தொழிலாளி; தனது வீட்டின் முன், நேற்று முன்தினம் இரவு மூன்று வெள்ளாடுகளை கட்டியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது மூன்று வெள்ளாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த டி.என்.,பாளையம் வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெம்போ நிறுத்த இடம்உரிமையாளர் முறையீடு
சத்தியமங்கலம் ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் ஸ்டாலின் சிவக்குமார், சத்தி நகராட்சி சேர்மேனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தி பழைய ஆற்றுபாலத்தின் அருகில், 30 ஆண்டுகளாக வாடகை வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. தற்போது பழைய பாலம் இடிக்கப்பட்டு புதியதாக பாலம் கட்டியுள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சாலை அமைத்துள்ளதால், வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. எனவே பாலத்தின் அருகில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
புது ரக நெல் பயிர்அதிகாரிகள் ஆய்வு
தாராபுரத்தை அடுத்த மடங்காட்டு புதுாரில், விவசாயி ஒருவரின் வயலில், குறுகிய கால பின் சம்பா பயிர், முதல் முறையாக பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் விதை சான்று அலுவலர்கள் மனோஜ் குமார் கணேசன் உள்ளிட்ட துறை அதிகாரிகள், பயிரை நேற்று ஆய்வு செய்தனர். இந்த குறுகிய கால நெல்பயிர், குறுகிய நாளில் அறுவடை செய்யப்பட்டு, அதிகப்படியான மகசூலை தரும் எனவும் கூறப்படுகிறது.
வடக்கு ஒன்றிய பா.ஜ.,நிர்வாகிகள் ஆலோசனை
தாராபுரத்தை அடுத்துள்ள மூலனுாரில், திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் குழந்தைவேலு தலைமையில், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி செயல்பாடு குறித்தும், ஆலோசித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், கருப்புசாமி, தினேஷ்குமார் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளி வேன் மீது மோதியடூவீலரால் ஒருவர் காயம்
திருப்பூரை சேர்ந்தவர் மணிவண்ணன், 55; காங்கேயத்தில் கரூர் சாலையில், டூவீலரில் நேற்று காலை, 9:00 மணியளவில் சென்றார். அவருக்கு முன்னால் சென்ற ஆட்டோ திடீரென நிற்கவே, அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டூவீலரை திருப்பினார். அப்போது எதிரே வந்த, காங்கேயம் அருகே காடையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் மீது டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போது வேனுக்குள், 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் வேறு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண்ணீர் புகை குண்டுவீச்சுக்கு கண்டனம்
தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர் பொன்னையன், ஈரோட்டில் கூறியதாவது:
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு, டில்லியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது, ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மத்திய அரசின் இந்த செயல், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமுறைகளை ஏவிவிடும் மத்திய அரசை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நாளை (இன்று) தேசிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் போராட்டத்தில் அனைத்து தொழில் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்
ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதியான, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜு, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கல்விக்கடன் சிறப்பு முகாமில்
40 மாணவர்கள் பங்கேற்பு
மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் சிறப்பு முகாம் ஈரோட்டில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, கல்வி கடன் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது: இந்த கல்வி கடன் முகாமில், 40க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தகுதியானவர்களுக்கு கல்வி கடன் கிடைக்கும். பள்ளி செல்லா குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்த்து ஊக்கமளிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பொறும் பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவியர், உயர்கல்வி படிக்கும்போது மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இணைக்க வேண்டும். கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி, www.vidyalakshmi.co.in மற்றும் www.jansamarth.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து ஆவணங்களை பதிவேற்றம் செய்து கடன் பெறலாம். இவ்வாறு பேசினார்.
நாளை தி.மு.க., பிரசார கூட்டம்
தி.மு.க., சார்பில் பிரசார கூட்டம் நாளை நடக்கிறது.
வரும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க., நிர்வாகிகளுடன், அமைச்சர் உதயநிதி காணொலி வாயிலாக சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அதில், வரும் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கும் விதமாக அனைத்து தொகுதிகளிலும் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பிரசார கூட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பிரசார கூட்டம் நாளை (17ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை -- சரளை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் இக்கூட்டம் நடக்கிறது. இதில், அமைச்சர் நேரு மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
மின் ஊழியர் சஸ்பெண்ட்
திருப்பூர் - பி.என்., ரோடு, குமரானந்தபுரத்தில் பனியன் நிறுவனம் ஒன்றுக்கு, மின் இணைப்புக்கு எவ்வித முறையான உரிய கட்டணங்களை அரசுக்கு செலுத்தாமல், முறைகேடாக ஒயர் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், நிறுவனத்தின் இணைப்பின் சர்வீஸ் ஒயரை, முறைகேடாக மாற்றம் செய்தது தெரிந்தது.
முறைகேட்டில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கேங்மேன் ஆசைமணியை 'சஸ்பெண்ட்' செய்து திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் உத்தரவிட்டார்.
மேலும், சமீபத்தில் முறைகேடாக கட்டட கட்டுமான பணிகளுக்காக மின் மீட்டரை இடமாற்றம் செய்தது தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அதில், வீட்டு மின் சாரம் இணைப்பை கட்டட கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தியது தொடர்பாக, கள ஆய்வு செய்து, 6 ஆயிரத்து, 318 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா
வெள்ளித்திருப்பூர் அருகே சங்கராப்பாளையம், வள்ளலார் புரம், பொட்டுச்சாமி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
முன்னதாக ராமேஸ்வரம் கடலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம், யாக வேள்வி உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:௦௦ மணிக்கு விநாயகர், பொட்டுச்சாமி அம்மன், வீரமாத்தி அம்மன் சன்னதி கலசங்களின் மீது, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.