ADDED : பிப் 20, 2024 11:41 AM
குடிநீர் தொட்டி திறப்பு
மக்கள் பயன்பாட்டுக்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கொடுமுடி பேரூராட்சி இரண்டாவது வார்டு ஏமகண்டனுார் மாரியம்மன் கோவில் அருகில் மக்கள் பயன்பாட்டுக்காக, 2.14 லட்சம் ரூபாயில், மோட்டார் பொருத்திய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் திலகவதி திறந்து வைத்தார். துணைத்தலைவர் ராஜா கமால்ஹசன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் மற்றும் வார்டு மக்கள் கலந்து கொண்டனர்.
ஜிம்னாஸ்டிக் போட்டியில்
ஈரோடு மாணவர் சாதனை
ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இதில், 18 மாநிலங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சிறப்பு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும், 11 மாணவர்கள் பங்கேற்றனர். சப்-ஜூனியர் பிரிவில் கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் சந்தானம் வெள்ளி பதக்கம், எட்டாம் வகுப்பு மாணவி ராகவி, ஏழாம் வகுப்பு மாணவி சஞ்சனா வெண்கல பதக்கம் வென்றனர்.
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைபவானி நகர பா.ஜ., சார்பில், 2, 4 மற்றும் 5வது வார்டுகளில், உறுப்பினர் சேர்க்கை, நகர தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. நகர பொருளாளர் பிரவீன்குமார், இளைஞரணி தலைவர் திருநாவுக்கரசு, அருண்குமார், சச்சின்குமார், கார்த்திகேயன், கவுதம், லட்சுமணன் உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர் அமைச்சர் வருகை ரத்துசிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான சண்முகம், சென்னிமலை மலை கோவிலில் இன்று மாலை தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஹெலிபேடு தளமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்டத்தில்337 மனுக்கள் ஏற்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜகோபால், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் குமரேஷ் மனுக்களை பெற்றனர். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், போலீஸ் நடவடிக்கை, வங்கி கடன் என, 337 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்த, பவானி, சோமசுந்தரபுரத்தை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
குழந்தையுடன் பெண் உள்பட 4 பேர் மாயம்
அம்மாபேட்டை, எஸ்.பி.குள்ளனுாரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி, 33; இவரின் மகள் கவுசிகா ஸ்ரீ, 10; கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூன்று மாதங்களுக்கு முன், சின்னியம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பண்ணாரி கோவிலுக்கு மகளுடன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. தந்தை ரங்கசாமி புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார், தேடி வருகின்றனர்.
* திண்டல், காரப்பாறையை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சகுந்தலா, 70; மகன் மணி பராமரிப்பில் இருந்தார். மன நிலை சரியின்றி சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த, 15ம் தேதி திண்டல் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பியவர் வீடு திரும்பவில்லை. மணி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
* கோபி அருகே நல்லதம்பி நகரை சேர்ந்தவர் அருந்ததி, 24; மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் தந்தை அன்பழகன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்மத்திய அரசை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை, சி.பி.ஐ., - அமலாக்கத்துறை மூலம் முடக்குவதும், காங்., வங்கி கணக்கை முடக்கி வைப்பதையும் கைவிட வேண்டும். டில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை வஞ்சிக்காமல், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், மூலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வட்டார தலைவர்கள் கோபாலகிருஜ்ணன், ஈஸ்வரமூர்த்தி, சண்முகம், கதிர்வேல், சர்வேஸ்வரன், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தபால் நிலையத்தில் புகுந்து
ஊழியரை கடித்த குரங்கு
சென்னிமலையில் பார்க் சாலையில், தபால் நிலையம் உள்ளது. அலுவலக துப்புரவு பணியாளராக மணிமலையை சேர்ந்தவர் வள்ளி, 38, பணிபுரிகிறார். நேற்று மதியம் தபால் நிலையத்துக்குள் இருந்து வள்ளி வெளியே வந்தார். அப்போது அங்குள்ள மதில் சுவரில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு, எட்டிக்குதித்து வள்ளியை பார்த்து முறைத்தபடி வந்துள்ளது. இதனால் பயந்து போனவர், அலுவலகத்துக்குள் ஓடியுள்ளார். ஆனாலும் வள்ளியின் காலில் கடித்து விட்டது. அப்போது, தபால் நிலையத்துக்குள் வந்த மற்றொரு குரங்கும் சேர்ந்து கொள்ள, ஊழியர்களை கடிப்பதற்காக துரத்தியுள்ளது. பீதியடைந்த ஊழியர்கள் அங்குமிங்கும் சத்தமிட்டபடி ஓட, இரு குரங்குகளும் வெளியே ஓடி விட்டன. குரங்கால் கடிபட்ட வள்ளிக்கு, சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் விழா
தற்காலிக கடைகள் ஏலம்
ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பாண்டு விழா மார்ச் மாதம் பூச்சாட்டி, ஏப்ரல் மாதம் நடக்கிறது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள், ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்யும் உரிமம், முடி காணிக்கை சேகரம் செய்து கொள்ளும் உரிமங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. உப கோவில்களின் கடைகள் உரிமம், 36 ஆயிரத்து 500 ரூபாய்; முடி சேகரிக்கும் உரிமம், 45 ஆயிரத்து 100 ரூபாய்; ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்திடும் உரிமம், 1.66 லட்சம் ரூபாய்; கேபிள் டிவி உரிமம், 44 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. பெரிய மாரியம்மன் கோவில் அருகில் தற்காலிக கடைகளுக்கான உரிமம், 48 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டதால், யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதற்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அடிப்படை வசதி கோரி
சித்தோடு மக்கள் மனு
சித்தோடு அருகே ஊத்துக்காடு, கன்னிமார்காட்டை சேர்ந்த முருகன் தலைமையில் வந்த பெண்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கி கூறியதாவது: கன்னிமார் காடு, ஊத்துக்காட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி குறவர் இன மக்கள், 260 வீடுகளில் வசிக்கிறோம். இவற்றில் குழந்தைகள் உட்பட, 1,000 பேருக்கு மேல் உள்ளோம். இங்கு முறையான சாலை அமைப்பு, தார் சாலை வசதி, பாதை கூட இல்லை. சுடுகாடும் இல்லை. ஊரை சுற்றி அடர்ந்த காடாக உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடிக்கடி வந்து பாதிக்கிறோம். இப்பகுதியில் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.
ரூ.1.34 லட்சத்துக்கு
தேங்காய் விற்பனை
ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 16,379 தேங்காய்களை வியாபாரிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 22.16 ரூபாய் முதல், 25.46 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 5,578 கிலோ தேங்காய், 1.34 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
எல்.ஐ.சி., ஏஜென்ட் வீட்டில் புகுந்த முகமூடி ஆசாமி
எல்.ஐ.சி., ஏஜென்ட் வீட்டில், முகமூடி அணிந்த ஆசாமி புகுந்தது குறித்து, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் நடராஜன், 64, எல்.ஐ.சி., ஏஜென்ட்; கடந்த, 17ம் தேதி இரவு, வீட்டில் குடும்பத்துடன் துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை, 4:30 மணிக்கு, வீட்டுக்கு வெளியே இருந்த கழிப்பிடத்துக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்றார். அந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்திருந்த மர்ம நபர் ஒருவர், நடராஜனை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து கடத்துார் போலீசில் புகாரளித்துள்ளார். மர்ம ஆசாமி, கையுறை மற்றும் முகமூடி அணிந்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மதுக்கடையை அகற்ற
வலியுறுத்தி முறையீடு
அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதுாரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: பிரம்மதேசம் புதுாரில், ஆப்பக்கூடல் - அந்தியூர் சாலையில் பாலம் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இங்கு மது குடித்துவிட்டு போதையில் வரும் நபர்களால் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு, தகராறு ஏற்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இரண்டு கடை செயல்படுவதால் குடிகாரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பாலம் அருகேயுள்ள மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கும்பாபிஷேக விழா
அந்தியூரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மக்கள் பவானி கூடுதுறைக்கு சென்று, தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கலசத்துக்கு வேத மந்திரங்கள் கூறி, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம், வெள்ளையம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
வி.சி., நிர்வாகி மீது
இந்து முன்னணி புகார்
கோவில் கட்டுமான பணியை தடுப்பதாக, வி.சி., நிர்வாகி மீது, இந்து முன்னணி அமைப்பினர், புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையிலான இந்து முன்னணியினர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி., மணிமாறனிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சூரம்பட்டி, மேற்கு அம்பேத்கர் வீதியில், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இடத்தை, ஊர் மக்களுடன் நாங்கள் இணைந்து நீதிமன்றம் மூலம் மீட்டோம். கோவிலில் மக்கள் வழிபட்டு வந்தனர். இடிந்த நிலையில் உள்ளதால், பாலாலயம் செய்து புது கோவிலை கட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்த இடம், கோவில், இந்து அருந்ததியர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரான சாதிக், கோவில் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, கோவில் கட்டுமான பணியை தொடர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியின விவசாயிகளுக்கு
மீனில் மதிப்பு கூட்டு பயிற்சி
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து, பழங்குடியின விவசாயிகளுக்கான, மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, ஈரோடு மாவட்டம் அரேபாளையத்தில் நேற்று நடந்தது.
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன முதுநிலை விஞ்ஞானி சந்திரசேகர், மீன்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, மீனில் அடங்கியுள்ள ஊட்டசத்து, அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை குறித்து பேசினார்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விஞ்ஞானிகள் பிரியா, சுஷ்மிதா, அஞ்சலி செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு கோபி வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன் தலைமை வகித்தார். விஞ்ஞானி கார்த்திக் முன்னிலை வகித்தார். பயிற்சியில், 60 பழங்குடியின விவசாயிகள்
பங்கேற்றனர்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில்
10 நாளில் 5 டூவீலர் திருட்டு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், போர்டிகோ பகுதியில் மேம்பாட்டு பணி தற்போது நடக்கிறது. இதன் அருகே நிறுத்தப்பட்ட ஐந்து பைக்குகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
ரயில்வே ஊழியர்களை சந்திக்க, ரயில் வருகை நேரம், பிளாட்பார்ம் எண் பார்க்க, ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ள நண்பர், உறவினர்களை அழைத்து செல்ல வருவோர் போர்டிகோ முன் டூவீலரை நிறுத்தி செல்கின்றனர். கடந்த, 10 நாட்களில் போர்டிகோ அருகே நிறுத்தப்பட்டிருந்த ஐந்து டூவீலர்கள் திருட்டு போயுள்ளது. இதுகுறித்து புகார் தந்தால், சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை. சூரம்பட்டி போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அடிக்கடி ரோந்து வந்தால் மட்டுமே, பைக் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை குறைக்க முடியும். இவ்வாறு கூறினர்.
டெங்கு காய்ச்சலுக்கு
பள்ளி மாணவன் பலி
காங்கேயம் அருகே நத்தக்காடையூர், கொக்குமடையை சேர்ந்த சக்திவேல் மகன் மணிஷ் கண்ணன், 16; நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ௧ படித்து வந்தார். ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவன் இறந்து விட்டார்.
டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியாகியுள்ளதால், கொக்குமடை பகுதியில் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மீன் பாசி குட்டை ஏலம்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் மருதுறை ஊராட்சி காளிவலசு பகுதியில், மீன்பாசி குட்டை உள்ளது. இதற்கு நடப்பாண்டுக்கான ஏலம் விடப்பட்டது. அதிக தொகையாக, 2,160 ரூபாய்க்கு, காளிவலசை சேர்ந்த சுந்தாராஜ் ஏலம் எடுத்தார்.
ஞாயிறு கடை நடத்த
அனுமதி கோரி மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் மனு வழங்கி கூறியதாவது:
நாங்கள், 55 ஆண்டுகளாக, மணிக்கூண்டு முத்துரங்கம் வீதி பகுதியில் ஞாயிற்றுகிழமைகளில் அதிகாலை, 5:00 மணி முதல், 9:30 மணி வரை சாலையோர கடை அமைத்து வியாபாரம் செய்கிறோம். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்ய தடை விதித்துள்ளனர். தடையை மீறினால் பொருட்களை பறிமுதல் செய்து விடுவோம் எனக்கூறி, கடை அமைக்க விடாமல் தடுக்கின்றனர். எங்களுக்கு மாற்றிடம் வழங்கும் வரை ஞாயிறு மட்டும் அதிகாலை, 4:00 மணி முதல் கடை அமைத்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
'சோலார்' திட்டத்தில்பங்கேற்க யோசனை
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சோலார் பம்புகள், கிரிட் இணைக்கப்பட்ட சோலார் மற்றும் பிற புதுப்பிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ, விவசாயிகளுக்காக 'பிஎம் குசூம்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில், 420 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய தனிப்பட்ட விவசாயிகள், விவசாயிகள் குழு, கூட்டுறவுகள், பஞ்சாயத்து, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலமும் அமைக்கலாம். இதற்கான நடவடிக்கைகளில் சோலார் பவர் பிளாண்ட் அமைக்க ஒப்பந்தபுள்ளி https://tntenders.gov.in/nicgep/app மற்றும் https://www.tangedco.org ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளோர் இணைய தளத்தில் வரும், 26 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தென்னை மரம் ஏறியவர்அமர்ந்தபடி இறந்த சோகம்
மொடக்குறிச்சி அருகே ஓடாநிலை, வாழை தோட்டம் வலசை சேர்ந்தவர் ரங்கசாமி, 65; எழுமாத்துார் அருகே ஒரு தோப்பில் தேங்காய் பறிக்க, 60 அடி உயர தென்னை மரத்தில், பிரத்யேக பெல்ட் கட்டி கொண்டு நேற்று ஏறினார். 25 அடி உயரம் ஏறிய போது அப்படியே அமர்ந்து விட்டார். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பிற தொழிலாளர்கள் சத்தமிட்டும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். நிலைய வீரர்கள் கயிறு கட்டி ரங்கசாமியை இறக்கினர். அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.
விஸ்வகர்மா திட்ட முகாம்
தாராபுரத்தை அடுத்த மணக்கடவு கிராமத்தில், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு, திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி தலைமையில், விஸ்வகர்மா திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முகாமில், 95 பேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டதாக நிர்வாகிகள் கூறினர்.
மூலனுாரில் திட்டப்பணி துவக்கம்
மூலனூர் அருகே, ராக்கியாவலசில், 2.05 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி; மேட்டுப்பட்டியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்ச்சாலை மற்றும் 1.69 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். இதேபோல் கிளாங்குண்டல் பகுதிகளிலும், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தனர். திட்டங்களின் மொத்த மதிப்பு, 5.53 கோடி ரூபாய் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெ.கருப்பட்டி கிலோ ரூ.140
ஈரோடு மாவட்டம், சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்கருப்பட்டி, 100 கிலோ வரத்தாகி, ௧90 ரூபாய்க்கு விற்பனையானது. இரு கருப்பட்டி ரகங்களும், கடந்த வார விலைக்கே விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 1.03 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
மொபைல்போன் கடைக்காரர் வீட்டில்
9 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
ஈரோடு, பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் ஞானபிரகாஷ். மாணிக்கம்பாளையத்தில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கந்து கொள்ள குடும்பத்துடன், கோபிக்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டார்.
நேற்று மதியம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக, அக்கம் பக்கத்தினர் ஞானபிரகாசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 9 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

