/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
/
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
ADDED : டிச 12, 2025 04:27 AM
ஈரோடு: சோலார் புது பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டருக்கான ஓய்வறையில் எந்த வசதியும் இல்லாததை கண்டு சட்டசபை குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் நடந்து முடிந்த பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய, சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவரான வேடச்சந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் நேற்று வந்தது.
அக்குழுவினர், சோலார் புதிய பஸ் ஸ்டாண்டை பார்வையிட்டு, பயணியர், டிரைவர், கண்டக்டர்களிடம் வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். பஸ் ஸ்டாண்ட் முதல் மாடியில், போக்குவரத்து பணியாளர் ஓய்வறையை பார்க்க சென்றனர். அறை பூட்டி கிடந்தது. சாவி தொலைந்து விட்டது என, கூறப்பட்டது.
பக்கத்தில் உள்ள மற்றொரு அறையை ஓட்டுநர், நடத்துநர் செஸ், கேரம்போர்டு விளையாட, புத்துணர்வுக்கான அறை எனக்கூறி திறந்து காட்டினர். ஆனால், அந்த அறை குப்பையாக இருந்தது.
மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயினிடம், எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் காந்திராஜன், 'இங்கு அரசு பஸ் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு தனி கழிப்பறை, குளியலறை, குடிநீர், பேன் வசதிகளை செய்யுங்கள். அவர்களுக்கான ஓய்வறையில் கட்டில், தரமான மெத்தை போடுங்கள். அவர்கள் ஓய்வெடுத்து பஸ்சை ஓட்டினால் தான் பயணியர் பாதுகாப்பாக இருக்க முடியும்' என, அறிவுறுத்தினர்.
சட்டசபை மதிப்பீட்டு குழுவில் 19 பேர் உள்ள நிலையில், நேற்றைய ஆய்வுக்கு மூன்று பேர் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

