/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்சியில் பங்கு; கட்சி தலைமை முடிவு செய்யும்'
/
ஆட்சியில் பங்கு; கட்சி தலைமை முடிவு செய்யும்'
ADDED : செப் 03, 2025 12:54 AM
ஈரோடு, காங்., கட்சி சார்பில், நெல்லையில் வரும், 7ம் தேதி நடக்கவுள்ள மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது: 'ஓட்டு திருட்டை' தடுப்பது தொடர்பாக இம்மாநாடு நடக்கிறது. பீகாரில், 60 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டது பற்றி ராகுல் வைத்த குற்றச்சாட்டை, பா.ஜ.,வால் மறுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையம் பல காரணம் கூறினாலும், 60 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பற்றி, விளக்கமும் தரவில்லை. தமிழகத்தில் வட மாநிலத்தவர்களை, வாக்காளர்களாக பட்டியலில் சேர்ப்பதை தடுப்போம். தமிழகத்தில் உண்மையான தமிழக மக்களை கொண்டு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த, 20 ஆண்டாக தி.மு.க., - காங்., மற்றும் தோழமை கட்சிகளிடம் நல்லுறவு நீடிக்கிறது.
பஞ்., முதல் லோக்சபா தேர்தல் வரை வெற்றி கிட்டியுள்ளது. தேர்தலில் கூட்டணி மற்றும் பிற விபரங்களை கட்சி தலைமை முடிவெடுக்கும். ஆட்சியில் பங்கு தொடர்பாக கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கருத்து கூற உரிமையில்லை. விருப்பங்களை கட்சி தலைமையிடம் சொல்லலாம். கொள்கை முடிவுகளை தலைமைதான் அறிவிக்கும். இவ்வாறு கூறினார்.மாவட்ட முன்னாள் தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.