ADDED : பிப் 14, 2024 10:04 AM
''குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கான முன்னோட்டமாக, 45 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது,'' என, லகு உத்யோக் பாரதி வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தால் குறு நிறுவனம்; ஐந்து முதல், 50 கோடி ரூபாய் வரை செய்தால், சிறு நிறுவனம்; 50 கோடி முதல், 250 கோடி ரூபாய் வரை செய்தால், நடுத்தர நிறுவனம் என்று அரசு வகைப்படுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 90 சதவீதமாக இருப்பது குறு நிறுவனங்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 10 சதவீதம் மட்டுமே உள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களுக்கான, 'ஜாப் ஒர்க்' செய்கின்றன.
பெரிய நிறுவனங்களுக்கான சேவைகளை அளித்து வந்தாலும், அதற்கான கட்டணம் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. உற்பத்தி மற்றும் சேவை கட்டணம் கிடைக்காதது, தேசிய அளவிலான பிரச்னையாக இருந்தது.
பிரச்னைக்கு தீர்வு
மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினராக இருந்த, லகு உத்யோக் பாரதி பிரதிநிதிகள், கட்டணம் சட்டரீதியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அதன்படியே, 45 நாட்களுக்குள் கட்டணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற சட்டம், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்., முதல், புதிய மாற்றங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 45 நாட்களுக்குள் கட்டணம் பட்டுவாடா செய்யாத இனங்கள், நிதியாண்டு இறுதியில் செலவாக கணக்கிட முடியாது.
மாறாக, வருவாயாக கருதி, அதற்கு வருமான வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பு, ஒட்டுமொத்த குறு, சிறு நிறுவனங்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு வழங்குவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
