ஊத்துக்குளி வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டுபெருந்துறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
ஊத்துக்குளி வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டுபெருந்துறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
ADDED : ஏப் 18, 2026 05:40 AM
பெருந்துறை :பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்ச லம், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய பகுதியில், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மணிக்காடு காலனி, கணபதிபாளையம், கொன்னக்காடு, செட்டிகுட்டை, வண்ணாம்பாறை, பொலையம்பாளையம், கம்மாள குட்டை நெட்டச்சிபாளையம், குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், பச்சாம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், காளியங்கிராயன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:
நான் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்தபோது, ஊத்துக்குளியை தனி தாலுகாவாக உருவாக்கினேன். புதிய நீதிமன்ற வளாகம் அமைத்தேன். குடிநீர் பிரச்னையை தீர்க்க. கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றி தந்தேன். விவசாயிகளின் கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டம் வர முழு முயற்சி மேற்கொண்டேன். ஊத்துக்குளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், இந்த ஐந்தாண்டுகளில் ஏதேனும் மக்கள் நலத்திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறாரா? நான் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருமஞ்சிறை பகுதிக்கு சமுதாய நலக் கூடம், வழித்தட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்.
ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிப்பு நிலையம் வர, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று முழு முயற்சி மேற்கொண்டேன். இவ்வாறு பேசினார்.
மேலும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளான கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீடிப்பு, நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கி, உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.
