ADDED : ஜூன் 23, 2025 05:34 AM
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை, குட்டபாளையத்தில் செயல்பட்டு வரும், ஆர்.பி.பி.புளு மெட்டல்ஸ் தனியார் கல் குவாரியில், சட்ட விரோதமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டதாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது.
தாராபுரம் ஆர்.டி.ஓ., ஆய்வில், 65,570 கன மீட்டர் அதிகமாக தோண்டி கனிமங்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதனால், 2.83 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கல் குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அளித்த மனுவில் கூறியதாவது:
குவாரிக்கு அபராதம் விதித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமங்களை வெட்டி எடுப்பதற்காக வெடிமருந்து வினியோகித்த நிறுவனத்தின் மீதும், வெடிமருந்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.