மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெரும்பள்ளம் ஓடையில் ஆய்வு
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெரும்பள்ளம் ஓடையில் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2026 04:48 AM
ஈரோடு:ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் அருகில் செல்லும் பெரும்பள்ளம் ஓடையில், சாயக்கழிவுநீர் கலப்பதால் அதிக நுரையுடன் தண்ணீர் செல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நமது நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறியதாவது:ஓடை கரையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக ஓடையில் கலக்கிறது. இதனால் ஓடை தண்ணீரில் நுரை பொங்கியுள்ளது. டி.டி.எஸ்., அளவு, 800க்கும் குறைவாகத்தான் காட்டுகிறது. இருப்பினும் தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். மாநகரில் உள்ள ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இம்மாதத்தில் இதுவரை சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேற்றியது மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காதது என ஆறு சலவை ஆலை, நான்கு சாய ஆலை, இரண்டு தோல் தொழிற்
சாலைகள் என, 12 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆறு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
