ADDED : டிச 19, 2025 07:55 AM

ஈரோடு: ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அடுத்த பேரேஜ் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகரித்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து விவசாயி சின்னதுரை கூறியதாவது: இப்பகுதியில், 300 ஏக்கர் விவசாய நிலத்ததில், காவிரி ஆற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விளைவிக்கும் வகையில், கடந்த சித்திரை மாதம் கரும்பு பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு, 20,000 கரும்பு விளைகிறது. இதற்கு, 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலும், 5 முதல், 8 அடி உயரம் வரை கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை துவங்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன், அரசு அதிகாரிகள் நேரில் வந்து கணக்கெடுத்து சென்றனர். வியாபாரிகளும் பார்வையிட்டனர். விலையை பொறுத்தவரை அரசு தரப்பில் வண்டிக்கு, 9,200 ரூபாயும், வியாபாரிகள், 10,000 ரூபாயும் தருகின்றனர். இதில் ஆட்க்கூலி செலவு, 1,300 ரூபாய். விளைச்சலின் போது மாவு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, இப்பகுதியில் மட்டும், 10 ஏக்கருக்கான கரும்பு பாதித்துவிட்டது.
இதேபோல் விலைவாசி உயர்வு, கூலி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னையால், கரும்பு விவசாயிகளுக்கு, அரசு கொடுக்கும் விலை கட்டுபிடியாவதில்லை. எனவே, 9,200 ரூபாய் என்பதை 10,000 ரூபாயாக அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

