ADDED : மே 26, 2026 04:27 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து விதிமீறி சாயக்கழிவுநீரை இரவு, பகலாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் ஆற்று தண்ணீர் மாசடைந்து விஷமாக மாறுகிறது.
இந்நிலையில், கடந்த, 17ல் குமாரபாளையம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மற்றும் மூன்று குழுக்கள் கொண்ட பொறியாளர்களால் ஒன்பதாம்படி, டி.வி.எஸ்., மேடு, பெரியகாடு, வசந்த நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில் ஆய்வு செய்து, விதிமீறி முறைகேடாக சாயக்கழிவு நீரை வெளியேற்றிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை
எடுத்தனர்.இந்நிலையில், நேற்றும் மாசுகட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் களியனுார், டி.வி.எஸ்., மேடு, ஒட்டமெத்தை பகுதியில் ஆய்வு செய்து விதிமீறி செயல்பட்ட, நான்கு சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தனர்.
