ADDED : ஜூலை 19, 2026 06:14 AM
ஈரோடு:ஈரோட்டில்
கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை, டாக்டர் மீது
நடவடிக்கை கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
மாவட்டம் அறச்சலுார், அறச்சலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிர் பகுதியை
சேர்ந்த விவசாயி மோகன்குமார், 29; இவர் மனைவி ஷர்மிளா, 31; கடந்த ஜன.,
30ல் திருமணம் நடந்தது. ஷர்மிளா கர்ப்பமானது உறுதியான நிலையில்,
ஈரோடு மூலப்பாளையம் பூந்துறை சாலையில் உள்ள ஓம் சக்தி மருத்துவமனை
மற்றும் டெஸ்ட் டியூப் பேபி சென்டரில் மார்ச், 17 முதல் ஷர்மிளா சிகிச்சை
பெற்றார். டாக்டர் சுகந்தி சிகிச்சை அளித்தார்.
ஆறு மாத கர்ப்பமாக
இருந்தபோது பரிசோதனையில், தாய், சேய் நலமாக இருப்பதாக
தெரிவித்துள்ளனர். கடந்த, 7ல் ஏழாவது மாத மருத்துவ பரிசோதனைக்காக
கணவர் மோகன் குமாருடன் ஷர்மிளா வந்துள்ளார். இரும்பு சத்துக்கான ஊசி
போடுமாறு, செவிலியரிடம் டாக்டர் சுகந்தி அறிவுறுத்தி வெளியே சென்று
விட்டார். அந்த ஊசி போட்டவுடன் முதலில் கைகளில், பின்னர் கால்களில்
வீக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஊசி வேண்டாம் என்று ஷர்மிளா கூறியும்
ஊசி போட்டதாக தெரிகிறது. இதனால் ஷர்மிளா சுய நினைவை இழந்து, உடல்
நிலை மோசமானதால், ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மோகன்குமார் கூறியதாவது:
மனைவியை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது குறித்து சிறிது நேரம் கழித்தே எனக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு
சென்றபோது,
6 மாத பெண் குழந்தை கருவிலேயே இறந்து விட்டது. தாயின் உடல்நிலை
மோசமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் கோவை
கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு மூன்று
நாட்கள் கழித்து இறந்த கருவை வெளியே அகற்றினர். இதில் என் மனைவி
உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் உடல் நிலை
சரியாக துவங்கி உள்ளது. தவறான ஊசியை போட்டதாக என் முன் செவிலியரை
டாக்டர் கடிந்து கொண்டார்.
ஊசி செலுத்தும் போது டாக்டர் இல்லாதது
ஏன்? ஊசி ஒத்து கொள்ளவில்லை என்று கூறி கை, கால்களில் வீக்கம்
ஏற்பட்டதை காட்டியும் கூட டாக்டர் உரிய பரிசோதனை, சிகிச்சை அளிக்க
முன் வராதது ஏன்? என தெரியவில்லை. தவறான சிகிச்சை அளித்த ஓம் சக்தி
மருத்துவமனை, டாக்டர் சுகந்தி உள்ளிட்ட மருத்துவ நிர்வாகத்தின் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சிசிடிவி' கேமரா பதிவு, மருத்துவ
சிகிச்சை அறிக்கை உள்ளிட்ட விபரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு
கூறினார்.
முன்னதாக தவறான சிகிச்சைக்கு உரிய இழப்பீடு கோரி மோகன்
குமார் மற்றும் அவரது உறவினர்கள் ஓம் சக்தி மருத்துவமனை முன்
நேற்று காலை, 10:35 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்
ஈரோடு-பழனி சாலையில் போக்குவரத்து பாதித்து வாகனங்கள்
அணிவகுத்து நின்றன. ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமார்
தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்த, 10.55 மணிக்கு மறியல்
முடிவுக்கு வந்தது. மறியலில் மோகன்குமார், ஷர்மிளாவின் உறவினர்கள்
50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் எஸ்.பி., கலெக்டர், மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள், தலைமை செயலகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
