ADDED : மே 24, 2026 05:20 AM

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள பெருமாள் கோவில் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பட்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த குடியிருப்புக்கு, 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொம்மன்பட்டி அருகில் தொட்டியிலிருந்து ஆற்று நீரை எடுத்து வந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை, 10:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.வெள்ளித்திருப்பூர் போலீசார், பட்லுார் ஊராட்சி செயலாளர் தங்க ராசு, குடிநீர் வடிகால் வாரிய பிட்டர் சசிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களுக்குள் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
