ADDED : அக் 20, 2026 01:51 AM
பவானிசாகர்: பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் பஞ்.,க்கு உட்பட்ட புங்கார் மற்றும் புங்கார் காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யாத நிலையில், வினியோகித்த நீரும் மண் கலந்து வந்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த மக்கள் சுத்தமான, சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, புங்கார் பஸ் நிறுத்தம் அருகே பவானிசாகர்-பண்ணாரி சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பவானிசாகர் அணை அருகில் இருந்தும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
பவானிசாகர் யூனியன் அதிகாரிகளிடம் பேசி சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என போலீசார் உறுதியளிக்கவே மறியலை கைவிட்டனர்.
