அரிசி ஆலையை அனுமதிக்கக்கூடாது:கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
அரிசி ஆலையை அனுமதிக்கக்கூடாது:கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 27, 2024 02:00 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி அருகே விநாயகன்புதுார், வி.கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளிபுரம், காலனி, பொரசமேட்டுபுதுார், புது அண்ணா காலனி, நாவன்காடு போன்ற பகுதியினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: சிவகிரி அருகே பொரசமேட்டில் நவீன அரிசி ஆலை விளை நிலப்பகுதியில் அமைக்கப்படுகிறது.
இந்த ஆலைக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, மஞ்சள், நெல், கரும்பு, வாழை, தீவனப்பயிர்கள், தென்னை போன்ற பயிர்களை செய்கின்றனர். வளமான விவசாய நிலத்தில், பிரமாண்ட ஆழ்துளை கிணறு கொண்டு ஆலைக்காக நீர் உறிஞ்சும் பணி நடந்து வருகிறது. அவ்வாறு செயல்பட்டால் இப்பகுதி நிலத்தடி நீராதாரம் பாதிக்கும்.நவீன அரிசி ஆலை, பிற தொழிற்சாலைகளை விளை நிலங்களை தவிர்த்து, தரிசு நிலங்களில் அமைக்கலாம். அவ்வாறு இல்லாமல் விளை நிலங்களில் நவீன அரிசி ஆலை அமைத்தால் சுற்றுச்சூழலும் பாதிக்கும்.இதுபற்றி பல்வேறு நிலை அதிகாரிகளிடம் மனு வழங்கி உள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, இதுபோன்ற ஆலைகளை விளை நிலப்பகுதியில் அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு தெரிவித்தனர்.
