ADDED : மார் 24, 2026 05:44 AM
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு சோதனையில் நேற்று முன்தினம் வரை, 90 லட்சத்து, 34,960 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் அடிப்படையில், 66 லட்சத்து, 39,080 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. மீதி, 23 லட்சத்து, 95,880 ரூபாய் கருவூலத்தில் செலுத்தினர்.
* பர்கூர்மலை தட்டக்கரை பகுதியில், தேர்தல் பறக்கும் படை சோதனையில், ஈரோட்டில் இருந்து வந்த பிக்-அப் வேனை சோதனையிட்டனர். இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாதேஷிடம், உரிய ஆவணம் இல்லாததால், 56 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
* பவானிசாகர் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர், சத்தியை அடுத்த கே.என்.பாளையம் வன சோதனை சாவடியில், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொலீரோ ஜீப்பில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ரயீஸ் வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 75,050 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* கோபி தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சரவணக்குமார் தலைமையில், கொளப்பலுார் செக்போஸ்ட் பகுதியில், வாகன சோதனையில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அந்தியூரை சேர்ந்த தனசேகரன், 30, பொலீரோ பிக் அப் சரக்கு வாகனத்தில் வந்தார். உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 76 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆசனுார்-பண்ணாரி சாலையில், பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் வந்த கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த தேவேந்திராவிடம், 70,000 ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
உறுதிமொழி ஏற்பு
அந்தியூர் அந்தியூர் பேரூராட்சி சார்பில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, நேற்று உறுதிமொழி ஏற்று கொண்டனர். முன்னதாக செயல் அலுவலர் சதாசிவம் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வழியாக பேரணி சென்றனர். அப்போது அந்தியூர் சந்தைக்கு வந்திருந்த மக்கள், வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜாகிர் உசேன் தலைமையில், பேரூராட்சி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். தாசில்தார்கள் கங்கா, திருமூர்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் குழு
