ADDED : ஆக 12, 2026 06:48 AM
ஈரோடு:''அறவழியில்
அறிவியல் செல்ல வேண்டும்,'' என்று ஈரோட்டில் நடந்த புத்தக
திருவிழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
ஈரோடு,
சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்து வந்த
புத்தகத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை நேர அரங்குக்கு
சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி தலைமை வகித்தார்.
இயக்குனர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை
தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
சக்திதேவி
அறக்கட்டளையின் சாதனை செம்மல் விருதை கலெக்டர் கந்தசாமி வழங்க, விருதை
பெற்ற ஐ.எஸ்.ஆர்.ஓ., முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை
பேசியது:
'சென் ஸி' என்ற 'சென் இசட்' இப்போது மாறி, 'சென்
ஆல்பா'வாக வந்துவிட்டார்கள். அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சியில்
மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
இதுவரை இருந்த தலைமுறைகள்
கடந்து, தற்போதுள்ள 'சென் ஆல்பா' தலைமுறைக்கு எல்லாமும் கிடைக்கும்
நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு, 15 ஆண்டுக்கு ஒரு முறை
தலைமுறை மாறுகிறது. உலக கண்டுபிடிப்பில், 'தீ' கண்டுபிடிப்பு
மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அப்போதுதான்
பிரச்னையும் எழுந்தது. தீயை வேறுவேறாக உருவாக்கி, போக்குகள் மாறின.
அதன் மாறான வளர்ச்சியால்தான், பூமி தற்போதைய நிலைக்கு காரணமானது.
அதனால்தான், 'அறவழியில் அறிவியல் கொண்டு செல்ல வேண்டும்' என்பதை நான்
தொடர்ந்து பேசி வருவேன்.
நான், அரசு பள்ளி கல்வி பாடத்திட்ட
வடிவமைப்பு குழு தலைவராக உள்ளேன். மிக விரைவில் புத்தகச்சுமை
குறைந்து, மிகச்சிறியதான, அதேநேரம் மிகப்பெரிய அறிவு சார்ந்த
புத்தகமாக மாறி வெளிவரும். அது போன்ற புத்தகம், வரும் காலங்களில்
படிக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அறிவாற்றலை உருவாக்கும்.
இவ்வாறு பேசினார்.
