/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரையில் பாதுகாப்பு; பாலம் அடைப்பு; படகு போக்குவரத்து நிறுத்தம்
/
கரையில் பாதுகாப்பு; பாலம் அடைப்பு; படகு போக்குவரத்து நிறுத்தம்
கரையில் பாதுகாப்பு; பாலம் அடைப்பு; படகு போக்குவரத்து நிறுத்தம்
கரையில் பாதுகாப்பு; பாலம் அடைப்பு; படகு போக்குவரத்து நிறுத்தம்
ADDED : ஜூலை 28, 2025 04:49 AM
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையில் மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெரிஞ்சிபேட்டையில் காவிரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பவானியில் பழைய காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று அணையில் இருந்து, ௭௫ ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே பவானிசாகர் அணையில் இருந்தும், ௨௦ ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பவானி ஆறு வழியாக வந்து, காவிரியில் கலக்கிறது. இந்நிலையில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமையில் தாசில்தார் முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்க கூடாது என்றும், கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல எச்சரித்தனர். கரையோர பகுதி வழியே குடியிருப்புக்கு செல்ல கூடாது. மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கருங்கல்
பாளையம் போலீசார் பேரிகார்டுகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பி.பெ.அக்ரஹாரம் காவிரி மின் கதவணை பகுதியில், காவிரி கரையோரமும் பேரிகார்டு தடுப்பு அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்த, 23 பேர் ஈரோடு வந்துள்ளனர். காவிரியில் நீரோட்டத்தை வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.
படகு போக்குவரத்து நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை - சேலம் மாவட்டம் பூலாம்பட்டி இடையே காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நடக்கிறது. 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பால், நேற்று காலை முதல் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள், நெரிஞ்சிப்பேட்டை கதவணை வழியாக பைக்குகளிலும், மேட்டூர் வழியாக பஸ்சிலும், 7 கி.மீ., முதல் 15 கி.மீ., வரை சென்று சுற்றி வருகின்றனர்.
பவானி பழைய பாலம் அடைப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் - ஈரோடு மாவட்டம் பவானி இடையிலான காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் நுழைவு வாயிலை, போலீசார் அடைத்துள்ளனர். இதனால் பவானியில் இருந்து குமாரபாளையம் செல்லும் மக்கள், பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே புதுப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.
கொடிவேரி தடுப்பணை வெறிச்
கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில், நேற்று காலை, 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடிவேரி தடுப்பணைக்குள் காலை முதலே சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால் தடுப்பணை வளாகம் மட்டுமின்றி, நுழைவு வாயில் பகுதி, பரிசல் துறை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பால், கோபி தாசில்தார் சரவணன் தலைமையில், அந்தந்த பஞ்., மூலம், தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக அம்மாபாளையம், மேவாணி, சவுண்டப்பூர், அடசபாளையம், பெரியகொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு கலெக்டர் கந்தசாமி, அம்மாபேட்டையில் காவிரி கரையோர பகுதியில் நேற்று ஆய்வில் ஈடுபட்டார். மீனவர் வீதி உட்பட காவிரி கரையோர பகுதியில் ஆய்வு செய்தார். அந்தியூர் தாசில்தார் கவியரசு மற்றும் அம்மாபேட்டை டவுன் பஞ்., நிர்வாகத்திடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார்
நிருபர் குழு.