/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் இன்று சோலார் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
/
ஈரோட்டில் இன்று சோலார் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
ADDED : டிச 04, 2025 05:55 AM

ஈரோடு: ஈரோட்டில், இன்று சோலார் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படவுள்ளது.
ஈரோடு நகரின் மத்தியில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கரூர், திருச்சி உள்பட தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களுக்காக, சோலார் அருகில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான, 19.69 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 2022 ஆகஸ்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு கடந்த மாதம், 26ல் சோலார் பஸ் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, இன்று காலை 11:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. இதற்கான பணிகளை ஆணையர் அர்பித் ஜெயின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ்களின் வழித்தடங்கள், ரேக்குகள், வணிக கடைகள், போலீஸ் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சோலார் பஸ் ஸ்டாண்டில் 63 பஸ்கள் நிறுத்தும் இடம், 185 நான்கு சக்கர வாகனங்கள், 883 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. 134 வணிக கடைகளில், 40 கடைகள் ஏற்கெனவே ஏலம் விடப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகள், அடுத்தடுத்த நாட்களில் ஏலம் விடப்படும். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்வாறு கூறினர்.
புறக்காவல் நிலையம்
மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சோலார் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். போலீசார் பகல், இரவு நேரங்களில் பணியில் இருப்பர். ரோந்து பணியும் மேற்கொள்ளப்படும். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் விசாரிக்கப்படுவர். இன்று முதல் புறக்காவல் நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது.

