ADDED : மே 13, 2026 06:21 AM

சத்தியமங்கலம்ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் அமைந்துள்ள, ஆசனுார் ஊராட்சி கெத்தேசால் பழங்குடியினர் கிராமத்தில், ரீடு நிறுவனம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சூரிய ஆற்றல் மின்சாரத்துடன் இயங்கும் போர்வெல் திட்டத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் போர்வெல் அமைப்புக்கு, ஆண்டு முழுவதும் நிலையான நீர் வசதி கிடைக்க வழி வகுத்துள்ளது.இதன் மூலம் இனி எந்த காலத்திலும், பயிர் செய்கை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சூரிய ஆற்றல் போர்வெல் தொடக்க விழா, ரீடு நிறுவன இயக்குனர்
கருப்புசாமி தலைமையில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், ஆசனுார் டி.எப்.ஓ., யோகேஷ் குமார் கார்க் ரிப்பன் வெட்டி சூரிய ஆற்றல் போர்வெல் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேர்மாளம் வனச்சரகர் வெங்கடாசலம், ஆசனுார் சூழலியல் வனச்சரகர் பிரகாஷ், ஜீரகள்ளி வனச்சரகர் சக்திவேல், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ரீடு நிறுவனத்தின் திட்ட மேலாளர் பழனிச்சாமி,ஆவண அலுவலர் பூந்தமிழன், திட்ட அலுவலர்கள் சரவணக்குமார், சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
