ADDED : ஏப் 01, 2024 03:41 AM
கொடிவேரியில் குவிந்த மக்கள்
கோபி: பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். தடுப்பணை வழியாக பவானி ஆற்றில், நேற்று காலை முதல், 500 கன அடி தண்ணீர் வெளியேறியது. கொளுத்தும் வெயிலால் அவதிப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான சுற்றுலா பயணிகள், கொடிவேரிக்கு நேற்று படையெடுத்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
அனுமதியின்றி பேரணி 79 பேர் மீது வழக்கு
பெருந்துறை: பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஈரோடு மாவட்டத் தலைவர் சசிதயாளன் தலைமையில், 60 இருசக்கர வாகனத்தில், 90 பேர் மற்றும் ஒரு மினிடோர் வாகனத்தில் பேண்ட் வாத்தியத்துடன், பெருந்துறை அடுத்த மலைசீனாபுரம் பகுதியில், கட்சியினர் கோஷமிட்டு சென்றனர். அனுமதி பெறாமல் சென்றதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரி ருத்ரமூர்த்தி, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி சசிதயாளன் உட்பட, 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.10 லட்சம் பறிமுதல்தாராபுரம்: தாராபுரம் அருகே கரூர் சாலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தாராபுரம், போளரையை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்த காரில் சோதனை செய்தனர். காரில், ௧௦ லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. உரிய ஆவணம் இல்லாதாதல், பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்திலரசன் முன்னிலையில், வருவாய் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைதாராபுரம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தாராபுரம் புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு சடங்கு செய்யப்பட்டு, புதிய ஒளி ஏற்றப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பங்கு தந்தை கனகராஜ், பாதிரியார் பீட்டர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. நேற்று காலை கூட்டு திருப்பலி நிகழ்வு மற்றும் ஆலயத்தை சுற்றி, இயேசு கிறிஸ்து சொரூபம் பவனி வந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கார் மோதி வாலிபர் பலிகாங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம், மீனாட்சி வலசை சேர்ந்தவர் ரவிக்குமார், 45; வெள்ளகோவில்-கோவை சாலையில், ஒர்க் ஷாப் அருகே நேற்று முன்தினம் காலை நின்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து கோவை சென்ற கார் ரவிக்குமார் மீது மோதியது. அப்பகுதி மக்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனைஈரோடு: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் திருநாளை, உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடினர். இதையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை, சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது கிறிஸ்துவர்களின் திருமுழுக்கு உறுதிமொழி புதுப்பிக்கப்பட்டு, புதிய தீர்த்தம் மந்திரிக்கப்பட்டது. நிகழ்வில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது.

