ADDED : மே 21, 2024 11:29 AM
சட்ட விதிமுறைகள் குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
ஈரோடு: ஈரோட்டில் பெண் போலீசாருக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் புதிய சட்ட விதிகள் நடைமுறைகளை கையாள்வது குறித்து பெண் நீதிபதி எடுத்துரைத்தார்.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில், புதிய சட்ட விதி மற்றும் நடைமுறைகளை கையாள்வது குறித்து, பெண் போலீாருக்கு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 90 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி மாலதி, எஸ்.பி. ஜவகர், பயிற்சி எஸ்.பி., சிறிஸ்டி சிங், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராஜா ரணவீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதிபதி மாலதி புதிய சட்ட விதிமுறைகள், அதை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார். புதிய சட்ட விதிகள் ஜூலை முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடையாளம் தெரியாத 55 வயது பெண் சாவு
ஈரோடு: ஈரோடு, சம்பத்நகர், வலம்புரி விநாயகர் கோவில் அருகில், நேற்று முன்தினம், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பழங்குடியின மாணவர்களின் வெளிநாட்டு கல்விக்கு யோசனை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த, தகுதியான மாணவ, மாணவியர் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, பி.எச்.டி., மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பு, வெளிநாடுகளில் தொடர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இணைய வழியில், https://overseas.tribal.gov.in/ மூலம் வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம். அதே தளத்தில் அமைச்சக போர்ட்டலையும் பார்வையிடலாம். மேலும் கல்வி நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கவும் யோசனை தெரிவித்துள்ளனர்.
புகையிலை பொருள் விற்ற இருவர் கைது
கோபி: கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில், சிறுவலுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த கன்னியம்மாள், 52, மளிகை கடையில், புகையிலை பொருட்கள் ஐந்து பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல் கைக்கோளம்பாளையத்தில், திங்களூர் போலீசார் ரோந்தில், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, 65, மளிகை கடையில், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
பச்சைமலையில் 2வது நாளாக லட்சார்ச்சனை
கோபி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோபி பச்சைமலை முருகன் கோவிலில், இரண்டாம் நாள் லட்சார்ச்சனை நேற்று நடந்தது. முன்னதாக வைகாசி விசாக திருவிழா லட்சார்ச்சனை, நேற்று முன்தினம் துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் லட்சார்ச்சனை நேற்று காலை, 9:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு, 200 கிலோ வில்வ இலையை கொண்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க லட்சார்ச்சனையில் ஈடுபட்டனர்.
அரசு - தனியார் பஸ் டிரைவர்கள் 'லடாய்'
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை, 8:40 மணிக்கு, ஒரு அரசு டவுன் பஸ், (தடம் எண்-31; எண் டி.என்.33-என்-2684) பெருந்துறைக்கு புறப்பட்டது. அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் சென்றது.
அப்போது வேகமாக வந்த ஒரு தனியார் டவுன் பஸ், (டி.எஸ்.பி.,-12, டி.என்.33-3272) அரசு பஸ்சின் குறுக்கே நிறுத்தி, அந்த டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் எப்படி செல்லலாம்? என்று கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு பஸ்களும் சாலையை அடைத்து நின்றதால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதித்தது. சிறிது நேரத்தில் இரு பஸ்களும் அடுத்தடுத்து சென்றன.

