ADDED : மார் 17, 2024 02:39 PM
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மக்களுக்கு நேரடி விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சங்கரன்மலைப்பட்டி கிராமத்தில், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களிடம், வரும் லோக்சபா தேர்தலின் போது, மக்கள் தயக்கமின்றி வாக்களிக்க ஏதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செயல்விளக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஓட்டுப்பதிவு மாதிரி இயந்திரத்தில், ஏராளமானோர் மாதிரி வாக்குப்பதிவுகளை பதிந்து விளக்கம் பெற்றனர். குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சந்தான செல்வம், வருவாய் ஆய்வாளர் குணா விக்னேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
டேபிள் பேனை சரி செய்ய
முயன்ற முதியவர் பலி
 
மொடக்குறிச்சி: சோலார் புதுார், பாலுசாமி  நகர், சக்தி கார்டனை சேர்ந்தவர் ஆறுமுகம், 80, விவசாயி. டேபிள் பேன் ஓடாததால், நேற்று முன்தினம் மாலை, சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சுவிட்ச் போர்டில் ஒயரை எடுக்காத நிலையில், சுவிட்ச்சை போட்டு விட்டு ஒயரை வாயால் கடித்தபோது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலில் எலி பேஸ்ட் கலந்த தந்தையால் குழந்தை சாவு
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த பெரியமடத்துபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 25; இவரின் மனைவி கோகிலா, 20; காதலித்த இவர்கள், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மாதமான ஆண் குழந்தை இருந்தது.
விக்னேஷ் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 14ம் தேதி இரவு, அடுப்பில் பாலை வைத்து விட்டு, கோகிலா பாத்ரூம் சென்று விட்டார். போதையில் இருந்த விக்னேஷ், பாலில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து விட்டார். இது தெரியாமல் கோகிலா குடித்து விட்டு, குழந்தைக்கும் கொடுத்து விட்டு துாங்க சென்று விட்டார்.
நள்ளிரவில் பாலில் எலி பேஸ்ட் கலந்ததை விக்னேஷ் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த கோகிலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கணவன், குழந்தையுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று மாலை இறந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

