ADDED : மே 20, 2026 05:48 AM

அந்தியூர்:அந்தியூர் தவிட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியை சேர்ந்த சலுான் கடைக்காரர் முருகேசன் மகள் தாரணி, 16; பிளஸ் 1 மாணவி. கடந்த ஏப்., 22ல் பாட்டி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி., கிரண் ஸ்ருதி அமைத்த தனிப்படை, மாணவியின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை தேடும் பணியில் இறங்கியது. அன்றைய தினமே, விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை கீழ் தனியாளம்பட்டை சேர்ந்த சதீஸ், 18, என்பவரை, அவரது வீட்டில் கைது செய்து, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணையை தொடர்ந்து, பவானி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சதீஸ் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். தாரணியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பவானிக்கு சதீஸ் வந்துள்ளார். அப்போது அவரை சந்தித்த தாரணி, நட்பாகத்தான் பழகினேன்; காதலிக்கவில்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்து தாக்கி, போட்டோ எடுத்துள்ளார். மேலும் மொபைல்போனில் பேசி, போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக தாரணிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு கூறினர்.
