ADDED : மே 26, 2026 04:37 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் களைய வலியுறுத்தி, இன்று (26-ம் தேதி) முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, நேற்று அங்கேரிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டனர். கலெக்டர் மற்றும் மேலாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், 'கடந்த 6 மாதங்களாகக் காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியால் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாகக் கூறிய மாவட்ட நிர்வாகம், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனி இப்பணியைத் தொடர முடியாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்தல், சரக்கு இறக்கும் கூலியை ஊழியர்கள் மீது திணிக்கக் கூடாது, உடையும் பாட்டில்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள 197 மதுக்கடைகளும் இன்று திறக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
