/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபர் கொலை வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறை
/
வாலிபர் கொலை வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறை
ADDED : ஜூலை 24, 2025 01:57 AM
ஈரோடு, உத்தரபிரதேசம், பத்தேப்பூர் மாவட்டம் அரைப்பூரை சேர்ந்தவர் சன்டிபால் ஹஜ்ஜிவா. இவரது மகன் சோனு (எ) ராஜ். இவர், ஈரோடு, தண்ணீர்பந்தல்பாளையத்தில் பிளீச்சிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த, 2017 டிச., 26ல் சோனு, ஒரு பெண்ணையும், இரண்டு வயது பெண் குழந்தையையும், அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்தார். மறுநாள் சோனு தங்கியிருந்த அறையில் இருந்து வெளி வரவில்லை. இரு நாள் கழித்து, அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் அறையை திறந்து பார்த்தபோது, ரத்தம் உறைந்த நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் சோனு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் நடத்திய விசாரணையில், சோனுவுடன் வந்த பெண், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆர்த்தி என்பதும், இவருக்கும் சோனுவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
ஆர்த்தியை, சோனு ஈரோடு அழைத்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து ஆர்த்தியின் கணவர் தேவதாஸ் சர்வானும் ஈரோடு வந்தார். பின்னர் ஆர்த்தியும், தேவதாஸ் சர்வானும் சேர்ந்து சோனுவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு ஈரோடு இரண்டாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ், நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் தேவதாஸ் சர்வான், ஆர்த்தி தம்பதியினருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.