ADDED : ஏப் 24, 2026 05:03 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, போஸ்டல் நகர், காமராஜர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 24, த.வெ.க., தொண்டர். ஈரோடு குமலன்குட்டை அரசு பள்ளி ஓட்டுச்சாவடி எண், 93ல் இவர் ஓட்டுப்பதிவு செய்ய வந்தார். அவரது ஓட்டை வேறு ஒரு நபர் போட்டுவிட்டு சென்றதாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும், ஓட்டுச்சாவடி அலுவலரிடமும் வாக்குவாதம் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட போலீசார் அனுப்பி வைத்தனர். ஈரோடு மாநகராட்சி அலுவலகம் வந்து ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயிடம் புகார் அளித்தார். அவருக்கு 'டெண்டர்' ஓட்டு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. பின், ஓட்டுச்சாவடி வந்த அவர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்யாமல், பிரத்யேக ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டை பதிவு செய்து
சென்றார்.
இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ''ஒருவரது ஓட்டை தவறுதலாக அல்லது வேறு தவறால் வேறு நபர் பதிவு செய்து சென்றால், முறையான வாக்காளருக்கு டெண்டர் ஓட்டு - 49பி, வாய்ப்பு தரப்படும். அவர் இ.வி.எம்.,ல் ஓட்டுப்பதிய முடியாது. ஓட்டுச்சீட்டில் பதிவு செய்து தனியாக வைத்திருப்பார்கள். ஓட்டு எண்ணிக்கையில் வேட்பாளர் வெற்றி, தோல்வியில் சில ஓட்டு வித்தியாசம் வந்தால், அப்போது இந்த ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். அல்லது, நிராகரிக்கப்படும்,'' என்றனர்.
த.வெ.க.,வினர் கூறுகையில், ''தினேஷ்குமார் ஓட்டை செலுத்திய நபர் வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணம் மூலமே ஓட்டை பெற்று பதிவு செய்துள்ளார். அந்த எண் அடிப்படையிலும், ஓட்டுச்சாவடியின் வெளியே, உள்ளே 'வெப் கேமரா' வைக்கப்பட்டுள்ளதால், அதன் பதிவை எடுத்து அந்நபர் மீது போலீஸில் புகார் செய்ய வேண்டும். அலுவலர்கள் பொறுப்பு இன்றி நடந்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் கலெக்டர், தேர்தல்நடத்தும் அலுவலர் என்ற முறையில் மாநகராட்சி ஆணையர், இதுபற்றி புகார் செய்து முன்னுதாரணமாக அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஜனநாயக கடமை ஆற்ற வருவோர் நம்பிக்கை இழப்பார்கள்,'' என்றார்.
* ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, ஈரோடு, ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் பூங்கொடி,39. இவர் நேற்று காலை, 11:00 மணி அளவில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்ய சென்றார்.
அவரது ஓட்டு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், புகார் தெரிவித்தார். மண்டல அலுவலர் உத்தரவுப்படி, பூங்கொடிக்கு டெண்டர் ஓட்டுப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின், பூங்கொடி மதியம், 3:00 மணிக்கு தனது டெண்டர் ஓட்டை பதிவு செய்தார்.
