நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குறைகேட்ட ஜவுளி அமைச்சர்
நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குறைகேட்ட ஜவுளி அமைச்சர்
ADDED : மே 24, 2026 05:20 AM
ஈரோடு:கைத்தறி, கதர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரி களை சந்தித்து நேற்று குறை கேட்டறிந்தார். மார்க்கெட் இங்கேயே தொடர வேண்டும். இவ்விடத்தை நவீனமாக மாற்றி அமைத்து தர சில வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். சில வியாபாரி கள், பழையபடி ஆர்.கே.வி., சாலைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். பெரும்பாலான வியாபாரிகள், சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை ஒட்டி அமைக்கப்படும் காய்கறி மார்க்கெட் வளாகத்துக்கு செல்ல விரும்பவில்லை.
பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: காய்கறி மார்க்கெட்டை மாற்றுவதா அல்லது இங்கேயே தொடர்வதா என்பது குறித்து வியாபாரிகளிடம் முழுமையாக கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட்டில் ரசீது வழங்காமல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர். அது சரி செய்யப்படும் என்றார்.
'தமிழக அமைச்சரவையில் முதலியார் சமூகத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை' என சமூக தளங்களில் பரவுவது குறித்த கேள்விக்கு, ''அவ்வாறு இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தனி நபர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் கூற இயலாது,'' என்றார்.
