ADDED : அக் 11, 2024 07:12 AM
ஈரோடு: தாளவாடி மலையில் வாரிசு சான்றிதழ் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, ஆசனுார் வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, ஆசனுார் பஞ்., அரேபாளையம், சீஹட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற, ஆசனுார் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். சான்றிதழ் வழங்க, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று, வி.ஏ.ஓ., ருத்ர செல்வன், 36, கேட்டுள்ளார். இறுதியில், 50 ஆயிரம் ரூபாய் தர பேரம் பேசி, 5,000 ரூபாய் முதல் கட்டமாக கொடுத்தார். மீதி பணத்தை, 10ம் தேதி தருவதாக ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில், ஆனந்தன் புகார் செய்தார். அவர்கள் திட்டப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களுடன், வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நேற்று சென்று ஆனந்தன் வழங்கினார். அப்போது வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வி.ஏ.ஓ.,வை கையும் களவுமாக கைது செய்தனர்.