ADDED : மே 06, 2026 04:25 AM
ஈரோடு:இந்திய
தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர காரணமாக இருந்த
மொடக்குறிச்சி தொகுதியில், த.வெ.க., தடம் பதித்து சாதித்துள்ளது.
மொடக்குறிச்சி
சட்டசபை தொகுதி மொத்த வேட்பாளர்கள், 2,07,697. ஓட்டு
போட்டவர்கள், 1,89,834. நோட்டோவுக்கு, 925 ஓட்டு கிடைத்தது. செல்ல
ஓட்டுகள், 146. இதில் த.வெ.க., வேட்பாளர் சண்முகன், 60,715 ஓட்டுகள்
பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.,வின் கிருத்திகா, 58,285 ஓட்டுகள் பெற்று
இரண்டாமிடமும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க.,
வேட்பாளர் செந்தில்நாதன், 58,236 ஓட்டுகளும் பெற்றனர். தேர்தலை
பிரசார களத்தில் கிருத்திகா, செந்தில்நாதன் இடையேதான் கடும் போட்டி
நிலவுவதாக மொடக்குறிச்சி தொகுதி வாக்காளர்கள் கருதினர்.
இருவரில் யாரேனும் ஒருவர் வரக்கூடும் என்று வாக்காளர்களும்
நினைத்தனர். இதற்கு காரணம், ஏற்கனவே பா.ஜ., வெற்றி பெற்ற தொகுதி.
ம.தி.மு.க.,வினரும் உதயசூரியன் சின்னம் தங்களை வெற்றி பெற வைக்கும் என
நம்பினர். ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக அமைந்தது. ஆனால் பா.ஜ.,
வேட்பாளருக்கு அக்கட்சி நிர்வாகிகளே ஒத்துழைப்பு வழங்கவில்லை.
அ.தி.மு.க.,வினரும் உட்கட்சி பூசல் காரணமாக பிரசார களத்தில்
ஒதுங்கினர். ம.தி.மு.க.,விலும் பிரதான கூட்டணி கட்சியான தி.மு.க.,
நிர்வாகிகள் முழு ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றவில்லை. ஆனால் விஜய்
என்ற ஒரு நபரால், தொகுதியில் அறிமுகமே இல்லாத சண்முகன்,
எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று, மொடக்குறிச்சி தொகுதி மக்களை,
ஆச்சர்யத்தால் முடக்கியுள்ளார்.
மாநகர் பகுதியில் மட்டும்தான்
விஜய்க்கு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்,
முற்றிலும் கிராமப்புற பகுதிகளை அதிகம் கொண்ட தொகுதியில் த.வெ.க.,
வெற்றி பெற்றிருப்பது ஆச்சர்யமான அதிர்ச்சியாகவே உள்ளது.
