/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மோடிக்கு இணையானவர் இந்தியாவில் யாருமில்லை
/
மோடிக்கு இணையானவர் இந்தியாவில் யாருமில்லை
ADDED : மார் 12, 2024 04:49 AM
ஈரோடு: ''பிரதமர் மோடிக்கு இணையாக, இந்தியாவிலேயே எந்த தலைவரும் இல்லை,'' என, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
புதிய நீதிக்கட்சி ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், தண்ணீர்பந்தல் பாளையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கிருபா தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தேர்தல் களப்பணி குறித்து பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக தமிழகத்துக்கு வருவதாக கூறுவது, தி.மு.க.,வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் எரிச்சலையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. பல்லடம் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, சென்னை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடிக்கு மக்கள் வெள்ளம் கூடிக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் மாற்று சக்தியாக பா.ஜ., வளர்ந்து வேகம் எடுத்திருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு இணையாக. பா.ஜ., வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, 30 இடங்களில் வெற்றி பெறும். அதேசமயம் இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
அவர்களால் அறிவிக்க முடியாது. ஏனெனில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணிக்கு வந்து விட்டார். ஷேக் அப்துல்லா, மம்தா பானர்ஜி தனியாக நிற்பதாக கூறிவிட்டனர். மொத்தத்தில் 'இண்டியா' கூட்டணி குழப்பமான கூட்டணியாக உடைந்து விட்டது. பிரதமர் மோடிக்கு இணையாக, இந்தியாவிலேயே எந்த தலைவரும் இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் வென்ற, 38 எம்.பி,க்களை கொண்டு, தி.மு.க., என்ன சாதித்தது? தமிழக எம்.பி.,க்கள் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறவில்லை. போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

