/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட் - டூவீலர் மோதலில் மூன்று பேர் பரிதாப பலி
/
மொபட் - டூவீலர் மோதலில் மூன்று பேர் பரிதாப பலி
ADDED : அக் 21, 2025 01:47 AM
காங்கேயம், கேரளாவை சேர்ந்தவர் கலைவாணி, 46; ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புதுவீதியை சேர்ந்த கார்த்திக் என்பரை திருமணம் செய்து, சென்னிமலையில் வசிக்கிறார். தம்பதியின் மகன்கள் மைத்ரேயன், 20, சரண், 13; கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்னிமலையில் ஒரு கூட்டுறவு சங்கத்தில் கலைவாணி பணிபுரிகிறார். மகன்களுடன் ஆக்டிவா மொபட்டில் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழியில் உள்ள நண்பர் வீட்டுக்கு, கலைவாணி நேற்று முன்தினம் மாலை சென்றனர். இரவு, 7:00 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில் வழியாக சென்றபோது, அப்பகுதி கிரசரில் வேலை பார்த்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி துகிராம் தாஸ், 27, இரு நண்பர்களுடன் ஸ்டார் சிட்டி பைக்கில் வந்தார். எதிர்பாராதவிதமாக மொபட்டும், பைக்கும் மோதிக்கொண்டதில், ஆறு பேரும் காயமடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மைத்ரேயன், சரண், துகிராம்தாஸ் இறந்து விட்டது தெரிய வந்தது. கலைவாணியை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.