மழைநீர் ஓடையில் கட்டட கழிவை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு
மழைநீர் ஓடையில் கட்டட கழிவை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு
ADDED : ஆக 03, 2026 06:03 AM

புன்செய்புளியம்பட்டி,:புன்செய்
புளியம்பட்டி நகராட்சி, 13வது வார்டு அம்மன் நகர் அருகே மழை நீர் ஓடை
உள்ளது. மழை காலங்களில் ஓடை வழியாக தண்ணீர் சென்று காவிலிபாளையம்
குளத்தில் கலக்கிறது.
இடிக்கப்பட்ட கான்கிரீட் மேற்கூரை மற்றும்
பெரிய கற்கள் உள்ளிட்ட கட்டட கழிவுகளை, நேற்று மதியம் டிராக்டர்
வாகனத்தில் கொண்டு வந்து, மழை நீர் ஓடையில் கொட்டி உள்ளனர். இதைக் கண்ட
அப்பகுதி மக்கள் திரண்டு, வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
அப்போது மக்கள் கூறியதாவது: கட்டட கழிவை கொண்டு
வந்த டிராக்டர் டிரைவரிடம் கேட்டபோது, நகராட்சி காண்ட்ராக்டர்
சிதம்பரம், கொட்ட சொன்னார் என கூறுகிறார். நகராட்சி காண்ட்ராக்டராக
இருப்பவர் முறையாக கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சி
காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதையடுத்து
டிராக்டர் டிரைவர் மொபைல்போனில் எங்கோ பேசிய நிலையில், சிறிது நேரத்தில்
ஒரு பொக்லைன் வாகனம் வந்தது. மழைநீர் ஓடையில் கொட்டிய கட்டட கழிவுகளை
பொக்லைன் வாகனத்தில் அள்ளி, டிராக்டரில் ஏற்றி திரும்ப எடுத்து சென்றார்.
