'தொழில்துறை வளர்ச்சிக்கு டிரேடு சென்டர்' தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி
'தொழில்துறை வளர்ச்சிக்கு டிரேடு சென்டர்' தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி
ADDED : ஏப் 17, 2026 05:48 AM

ஈரோடு : ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. தலைவர் பாலு (எ) தனபால் தலைமை வகித்தார். பொருளாளர் முருகானந்தம் வரவேற்றார்.
இதில் ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டுகள் தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தொழில், கல்வி, உள் கட்டமைப்பு, நலத்திட்டங்கள் வழங்குதல் என அனைத்திலும் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. ஈரோட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கரூர் சாலை துவங்கும் ரிங் ரோட்டை திண்டல் முதல் கனி ராவுத்தர் குளம் வரை இணைக்கும்போது, ஈரோட்டுக்குள் வராமல் கனரக வாகனங்கள் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் துறை முன்னேற்றத்துக்காக 'பையர் - செல்லர் மீட்' நடத்தி, 700 கோடி ரூபாய்க்கு மேலான தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. '
டெக்ஸ்வேலி அருகே நேனோ பார்க் அமைய உள்ளது. மஞ்சள் ஆராய்ச்சி மையம், மஞ்சள் ஏற்றுமதி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கொடீஷியா போன்ற ஒரு டிரேடு சென்டர் ஈரோட்டில் அமைக்க வேண்டும் கோரிக்கையை தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அது மிகப்பெரிய திட்டம் என்பதால், இங்குள்ள தொழில் துறையினர் உதவியுடன் மிக விரைவில் அமைத்து, தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமானவர்களின் வேலைவாய்ப்புக்கும் வழி செய்யப்படும். இவ்வாறு பேசினார்.
